திருச்சி பிரபல நகைக்கடையில் நடைபெற்ற கோடிக்கணக்கான நகைக்கொள்ளை சம்பவத்தில், தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தென்னிந்தியா முழுதும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் முருகன் இதுவரை போலீசிடம் சிக்காமல் தப்பி வருவதும், அவன்மீது 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் தமிழகம் உள்பட மேலும் 3 மாநிலங்களில் பதிவாகி உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கொள்ளையடிக்கும் இடங்களை தேர்வு செய்து, சந்தேகத்திற்கு இடமின்றி, வாக்கி டாக்கிகள் சகிதம், சொந்த காரில் வந்து கொள்ளையடித்துச் செல்வது முருகன் மற்றும் அவனது கூட்டாளிகளின் வழக்கம்.
தற்போது திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கியுள்ள மணிகண்டன் உள்பட சிலரிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், முருகன் குறித்தும், அவனது தலைமையில் நடைபெற்ற கொள்ளை குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவாரூர் முருகன்
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், அங்குள்ள கல்லுபட்டறை, சீராத்தோப்பு, பேபி டாக்கீஸ் ரோடு பகுதிதான் முருகனின் சொந்த ஊர்.
முருகன் தலைமையிலான கொள்ளைக்கும்பல், தாங்கள் கொள்ளையடிக்கும் பகுதியை தேர்வு செய்து சில நாட்கள் அங்கு நோட்டமிடுவது வழக்கம். அதுவும் காவல்துறையினரின் உடையில், வாக்கி டாக்கி சகிதம் தங்கள்மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு நோட்டமிட்டு வருவதும், பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவதும், அங்குள்ள கேட்டின் இடையில் பேப்பர் வைத்து விட்டு செல்வதும், அதை யாரும் சில நாட்கள் எடுக்காத நிலையில், அந்த வீட்டில் ஆள் இல்லை என்பதை அறிந்துகொண்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவார்கள்.
மரக்கதவு, இரும்புக் கதவு போன்றவற்றை உடைப்பதற்காக சில பிரத்யேக உபகரணங்கள் பயன்படுத்தம் இந்த கும்பல், சுவரைத் துளையிடக் கருவிகளும் வைத்திருப்பார்கள். இதற்காகப் பயிற்சியும் எடுத்துள்ளனர். அதை பயன்படுத்தி சொகுசுக் காரில் வலம் வந்து இரவில் தங்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கொள்ளை அடிக்கும் சமயம் வேவு பார்க்க, உள்ளே பல அறைகளில் கொள்ளை அடிக்கும் இருவர் என மூன்று பேர் ஆளுக்கொரு வாக்கி டாக்கியுடன் களத்தில் இறங்குவார்கள். கண்டிப்பாக செல்போனைப் பயன்படுத்த மாட்டார்கள். வெளியே நிற்பவர் வெளியில் உள்ள நிலையை வாக்கி டாக்கியில் அவ்வப்போது தெரிவிப்பார். தேவையான உதவிகள் செய்வார். உள்ளே திருடச் செல்பவர்கள் தங்களுக்குள்ளும் வாக்கி டாக்கியில் பேசிக்கொள்வார்கள். இதனால் கொள்ளை நடந்த பின்னர் போலீஸார் அப்பகுதியில் செயல்பட்ட செல்போன் எண்களை எடுத்தாலும் இவர்கள் சிக்காமல் எளிதாக தப்பித்து வந்துள்ளனர்.
திருச்சி ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் போலீஸாரிடம் சிக்கிய மணிகண்டன் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்தக் கொள்ளையில் திருவாரூர் முருகனின் மாஸ்டர் பிளான் இருப்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
அண்ணாநகர் கொள்ளை
திருவாரூர் முருகனைப் பிடிக்க தமிழ்நாடு உள்பட 4 மாநில போலீஸாரும் முயற்சி செய்தும் பலனில்லை. இதுவரை காவல்துறையினரின் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
கொள்ளைக்கான ஸ்கெட்ச்சை போட்டுக் கொடுக்கும் முருகனுக்கு கொள்ளையடிக்க வங்கிகள், பங்களா டைப் வீடுகள், ஜூவல்லரிகள்தான் முருகனின் டார்கெட்.
கடந்த 2018-ம் ஆண்டு . சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள பங்களா வீடுகளை முருகன் டீம் பிளான் போட்டுக் கொள்ளையடித்துள்ளனர். அண்ணாநகர் காவல் சரகத்தில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. 19-க்கும் மேற்பட்ட தொடர் கொள்ளைகள் நடந்தன. அனைத்திலும் கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்போதைய அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் கொள்ளை தொடர்பாக விசாரித்தனர்.
விசாரணையில் திருவாரூர் முருகனின் வலதுகரமான தினகரன் மற்றும் அவர்களின் கூட்டாளி கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது திருவாரூர் முருகன். ஆனால், அவரைப் போலீஸாரால் பிடிக்க முடியவில்லை. ஆனால், அவனது கூட்டாளிகளான திண்டுக்கல்லைச் சேர்ந்த கோபால், புதுச்சேரியைச் சேர்ந்த ரகு, கார்த்தி, காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள். திருச்சி நகைக்கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் இவர்கள்மீது தங்களது சந்தேகப்பார்வையை திருப்பியதில்தான், மணிகண்டன், ரகு, மூர்த்தி, கோபால் ஆகியோர் சிக்கி உள்ளனர்.
இதில் பிடிபட்ட தினகரன்தான் முக்கியக் குற்றவாளி. இவரும் திருவாரூர் முருகனும் கூட்டாளி கள், இவர்கள் மீது நான்கு மாநிலங்களிலும் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த வழக்குகள் உள்ளன. இந்த வழக்கிலும் திருவாரூர் முருகன் உட்பட இருவர் சிக்கவில்லை.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளைக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இதில் முக்கியக் குற்றவாளி திருவாரூர் முருகன். இவரது கூட்டாளிகள் தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் கிலோ கணக்கில் தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆந்திராவில் கொள்ளையடித்தால், கேரளாவுக்குத் தப்பிச் செல்வது, கேரளாவில் கொள்ளை யடித்து விட்டு தமிழகம் தப்பி வருவது என்று நான்கு மாநில போலீஸாருக்கு தண்ணீர் காட்டும் இவர்களில் முருகன் மட்டும் இதுவரை சிக்கியதே இல்லை.
ராபின்ஹுட் முருகன்
காவல்துறையினர் முருகன் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று கூறி பல கொள்ளை வழக்குகளை கிடப்பில் போட்டுள்ளனர். ஆனால், முருகன் திடமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு வருவதால், அவனை போலீசாரால் நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
முருகன் திருவாரூர் சீராதோப்பு பகுதி மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றவன் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. அந்த பகுதியில் முருகன்தான் ஹீரோ என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு கொள்ளையடிக்கும் பணத்தினால் பல உதவிகள் செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி முடித்தும், அதில் ஒரு பகுதியைக்கொண்டு ஏழை எளிய மற்றும் கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும், பலரின் கஷ்டங்களுக்கு உதவியுள்ளதால், அந்த பகுதியில் முருகன் ஒரு ராபின்ஹுட் போல பாராட்டப்படும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
மேலும், சீராத்தோப்பில் ஆதரவற்றோர் இல்லம் தொடங்க முருகன் முயற்சி செய்ததாகவும், ஆனால், அதற்கு அதிகாரிகள் அனுமதி கொடுக்காத நிலையில், அந்த திட்டத்த கைவிட்ட முருகன், சில ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி சிறுவர்கள் சிலரை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் முருகனுக்கு அவரின் சொந்த ஊரில் தனிப்பட்ட செல்வாக்கு இருந்து வருகிறது.
முருகனுக்கு மஞ்சுளா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆரம்பகால கட்டத்தில் வீடுகளில் கொள்ளையடித்த முருகன், தற்போது பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறார்.
திருச்சி ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்திலும் இந்த டீம், நோட்டமிட்ட பிறகுதான் கைவரிசை காட்டி உள்ளதாக காவல்துறையினர் கூறி வருகின்றனர். உண்மை என்ன என்பது முருகன் சிக்கினால் மட்டுமே தெரியவரும்.