சென்னை:

திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவரும் நிலையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் அமமுக கட்சி வேட்பாள ராக  காமராஜ் என்பரை அறிவித்து உள்ளது.

திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. இதற்கான  வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வரும்  10-ந்தேதி கடைசி நாளாகும்.

திருவாரூர் தொகுதி மறைந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் தொகுதி மற்றும் அவரது  சொந்த ஊரான திருக்குவளை ஊர் உள்ள  தொகுதி என்பதால் என்பதால், திருவாரூர் தொகுதி திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த தொகுதியை கைப்பற்றுவதில் திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அதேவேளையில் அதிமுகவும் இந்த தொகுதிகளை கைப்பற்ற  ஆசைப்படுகிறது. இந்த இரு முக்கிய கட்சிகளுக்கு இடையே, ஆர்.கே.நகர் தொகுதிபோல நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் கெத்து காட்டி வருகிறார். அதைத்தொடர்ந்து இன்று முதன்முதலாக தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரையும் அறிவித்து உள்ளார்.

தஞ்சையில் இன்று நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.  காமராஜ் ஜன.8-ம் தேதி  வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறினார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.காமராஜ் அ.ம.மு.க.வின்  திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.  காமராஜ் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், இடைத்தேர்தலுக்கு எந்த கட்சிகளோடும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்றும்,  நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில கட்சிகளோடு பேசி வருகிறோம் என்றார்.

தேர்தலின்போது பணம், பொருள் கொடுப்பதால் மக்களை விலைக்கு வாங்கிவிட முடியாது என்றும் கூறினார்.