திருவண்ணாமலை:
வீட்டுக்குள் ரகசிய அறை அமைத்து கருகலைப்பில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை, செங்குட்டுவன் தெருவில் அரசு அங்கீகாரம் இல்லாமல் ஸ்கேன் சென்டர் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில், பெயர் பலகை இல்லாமலே ஆனந்தி என்பவர் வீட்டில் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தது தெரியவந்தது.
அதிகாரிகள் சோதனையின்போது, வீட்டின் தரை தளத்துக்கு கீழே இருந்த ரகசிய அறையை திறக்க மறுத்து தகராறு செய்தார். இதையடுத்து அதிகாரிகள் கதவின் பூட்டை உடைத்து அறையை திறந்து பார்த்தனர்.
அறையின் உள்ளே ஸ்கேன் மெஷின் மற்றும், கருக்கலைப்புக்கு தேவையான உபகரணங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரதுறை அதிகாரி கூறியதாவது: எந்த வித கல்வி தகுதியும் இல்லாமல் ஆனந்தி ஸ்கேன் சென்டர் நடத்தி வந்துள்ளார். இங்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து பார்த்து கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என கண்டறிந்து, பெண் சிசு என்றால் கலைத்துவிடுகிறார்கள். இதுகுறித்து தகவல் வந்ததையடுத்து சோதனை நடத்தினோம். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த, ஸ்கேன் கருவி, எல்இடி டிவிகள், மருந்து, ஊசிகளை பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.
லேப் டெக்னிஷியன் டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் கிளினிக்குகளில் பணிபுரிந்த குறைந்தபட்ச அனுபவத்துடன் ஆனந்தி கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்ற சட்டவிரோதமாக கருகலைப்பில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
2012ம் ஆண்டில் இதேபோல் சிக்கி ஆனந்தி கைதானார். ஆனாலும், மீண்டும் கருகலைப்பில் ஈடுபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆனந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.