திருவையாறு: திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான  பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் விழாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இன்று பஞ்சகீர்த்தனை விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, ‘ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை’ சார்பில், ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி இன்று நடைபெறுகிறது. இதனையடுத்து நடைபெற்ற விழாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேறு பஞ்சரத்ன கீர்த்தனைகள் இன்று  தொடங்கி வைத்தார்.  மேலும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், காலை 9 மணி முதல் 10 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இதையடுத்து, காலை 10 மணிக்கு நாதசுரம், 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, முற்பகல் 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் உள்பட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இன்று இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் வீதி உலா நடைபெறவுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு ஆளுநரின் வருகையையொட்டி தஞ்சை மற்றும் திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தியாகபிரம்மம் ஆந்திர பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து குடியமர்ந்து, தெலுங்கும், வட மொழியும் கற்றுக் கொண்டார். அதுதான் மிகப் பிரம்மாண்டமான எண்ணம். அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போதுதான் இங்கே தியாகபிரம்மத்தின் இசையைக் கேட்க பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்தனர். வடக்கும், தெற்கும் இணைந்து பணியாற்றினால்தான் இந்த நாடு சுபிட்சமாக இருக்கும்.

தமிழ்தான் நமக்கு உயிர்.  இருந்தாலும், மற்ற மொழிகளைக் கற்கவும், மதிக்கவும் வேண்டும். இன்னொரு மொழியைக் கற்கும்போதுதான் தமிழ் மொழியில் உள்ள நல்லவற்றை, அந்த மொழி பேசுபவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். எனவே, மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. இதைச் சொல்வதால், தமிழை குறைத்துக் கூறுவதாக அரசியல் செய்யக் கூடாது.

தியாகபிரம்மம் தமிழகத்தில் இருந்து தெலுங்கு கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதுமுள்ள இசை ரசிகர்களை ஈர்த்தார். இதன் மூலம் மொழியின் வல்லமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் இப்போது விஞ்ஞானத்தில் கண்டுபிடித்ததை, அன்றைய மெய்ஞானம் திருவையாறில் நடந்துள்ளது. தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று கூறினார்.