திருப்பாவை –ஆறாம் பாடல்
ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை ஆறாம் பாடலைக் காண்போம்
திருப்பாவை 6 :
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ள(ச்) சகடம் கலக்கழிய(க்) காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்து(க்) கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பொருள் :
காலையில் பறவைகள் கூவி விட்டன.கருடனை வாகனமாகக் கொண்ட பெருமாளின் கோயிலில் வெள்ளை சங்கு பெரிய ஓசை எழுப்பி அழைப்பது கேட்கவில்லையா ?
இளம் பெண்ணே !எழுந்திரு.
பூதனை எனும் அரக்கியிடம் விஷமாகிய பாலை உண்டு அவளை மாய்த்தவனை,
வஞ்சகமாக வண்டிச் சக்கரம் உருவில் சகடாசுரன் வந்த போது, தன் காலால் உதைத்து,அதன் உருவம் குலையும்படி நொறுக்கி அழித்தவனை,
பாற்கடலில் வெள்ளை பாம்பான ஆதிசேஷன் மேல் துயில் கொண்டிருக்கும்,உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை,
முனிவர்களும்,யோகிகளும்,”ஹரி !ஹரி !”, என்று கூறும் ஒலியை உள்ளம் குளிரும் வண்ணம் கேட்டு,நினைவில் நிறுத்திக்கொள் பெண்ணே !