திருப்பாவை –ஐந்தாம் பாடல்
ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை ஐந்தாம் பாடலைக் காண்போம்
திருப்பாவை 5 :
புள்ளும் மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
பொருள் :
மாயங்கள் செய்பவனை,வட மதுரையில் பிறந்த குமரனை,பெருகி ஓடும் துாய்மையான நீரைக் கொண்ட யமுனைத் துறையில் வசிப்பவனை, இடையர் குலத்தில் தோன்றிய மங்கள தீபம் போன்றவனை,தன்னை பெற்ற தாயின் வயிற்றுக்கு நீங்காத பெருமை சேர்த்த தாமோதரனை,
நாம் தூய்மையாக வந்து,நல்ல தூய மலர்களைத் தூவி வணங்கி,வாயால் போற்றிப் பாடி,சிந்தையில் அவனை மட்டுமே நிறுத்தி தியானித்தால்,
அவன் நாம் முன்னர் செய்த பாவங்கள் மட்டுமில்லாமல் மேலும் எந்தத் தீங்கும் நம்மை அண்டவிடாமல் நீக்கி அதை நெருப்பில் இட்ட தூசு போல அழித்து விடுவான் !
ஆகையால், பாவை நோன்பிருப்போம், வாருங்கள் !