ஜோஷி மடம் அல்லது ஜோதிர் மடம்
ஜோஷி மடம் (Joshi Mutt) அல்லது ஜோதிர் மடம் (Jyotirmath) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் , இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி பகுதியாகும். இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும் ஜோஷி மடம் நுழை வாயிலாக அமைந்துள்ளது. இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று.
ஜோஷிமடம்
சங்கரருடன் சீடர்கள், பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்
ஜோஷி மடம்
அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக ஆதிசங்கரர் ஜோஷி மடத்தை நிறுவினார். ஜோஷி மடத்தில் குடிகொண்டுள்ள முக்கிய இறைவன் நரசிம்மர் ஆவார். பத்ரிநாத் கோயில், குரு கோவிந்த் கோயில், பூக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் தேசிய பூங்கா ஆகிய இடங்களுக்கு ஜோஷி மடத்திலிருந்துதான் செல்ல வேண்டும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
சங்கராச்சாரியார் மடம்
ஜோசி மடம் ஆதிசங்கரரால் இமயமலையில் நிறுவப்பட்டது. இங்குள்ள புனித குகையில் ஆதிசங்கரர் தவமியற்றியதாகக் கருதப்படுகிறது. பத்ரிநாத் கோயில், சங்கரர் நிறுவிய ஜோஷி மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
நரசிம்மர் கோயில்
பனிக்காலத்தில் பத்ரிநாத் கோயில் மூடப்படும் போது, கோயிலிலுள்ள முக்கிய தெய்வச் சிலைகளை தீபாவளி நாள் முதல் ஜோஷி மடத்தில் உள்ள நரசிம்மர் கோயிலினுள் வைத்து வழிபடுவர்.
தபோவனம்
ஜோஷி மடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் தபோவனம் எனும் அமைதியான இடம் அமைந்துள்ளது. இங்கு இயற்கையாக அமைந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க இதமானது. தௌலி கங்கை ஆறு அமைதியாக இவ்விடத்தைக் கடக்கிறது.
பவானி கோயில்
அழகிய பவானி கோயில் ஜோஷி மடத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
பத்ரிநாத் கோயில்
ஜோஷி மடத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஸ்ரீகிருஷ்ணரின் பத்ரிநாத் கோயில் அமைந்துள்ளது.
போக்குவரத்து வசதிகள்
ஜோஷி மடத்திற்கு 293 கி.மீ தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம், டேராடூனில் உள்ளது.
மிக அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம், அரித்வார் அருகே உள்ள ரிஷிகேஷில் அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் 58 ஜோஷி மடத்தைப் புதுதில்லி, மற்றும் இந்திய-திபெத் எல்லைகளைச் சாலை வழியாக இணைக்கிறது.