திருப்பாவை –15 ஆம் பாடல்
ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை 15 ஆம் பாடலைக் காண்போம்
திருப்பாவை 15 :
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!
பொருள் :
ஆண்டாள்/கிளம்பிய பெண்கள் :எலே,இளங்கிளியே ! இன்னுமா உறங்குகிறாய் ?
கிளம்பும் பெண்:பெண்களே !’சில்’ என்று கூச்சல் போட்டு அழைக்காதீர்கள்.கொஞ்சம் பொறுங்கள்.புறப்பட்டு வருகிறேன்.
ஆண்டாள்/கிளம்பிய பெண்கள் :உன்னுடைய வார்த்தைகள் நன்றாக இருக்கிறது.உன்னுடைய கட்டுக்கதைகளின் வலிமை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும்.
கிளம்பும் பெண்:நான் இல்லை, நீங்கள்தான் கெட்டிக்காரிகள்!பரவாயில்லை நானே வாயாடியாக இருந்து விட்டு போகிறேன்.
ஆண்டாள்/கிளம்பிய பெண்கள் : நீ உடனே புறப்பட்டு வா,வேறு என்ன வேலை இருக்கிறது ?
கிளம்பும் பெண்:நம் தோழிகள் எல்லோரும் வந்து விட்டார்களா ?
ஆண்டாள்/கிளம்பிய பெண்கள் :ஆமாம்.எல்லாரும் வந்து விட்டார்கள்.நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப்பார்.குவலயாபீடம் என்னும் வலுவான யானையை அழித்தவனும்,எதிரிகளின் பெருமையை மாற்றி அழிக்கும் வலிமை கொண்டவனுமான மாயக்கண்ணனை பாட எழுந்து வா பெண்ணே !
குறிப்பு : இதுவரை உறங்கும் கோபியரை எழுப்பிக் கொண்டிருந்த ஆண்டாள்,இந்தப் பாடலில் விழித்துக்கொண்ட பெண்ணுடன் பேசுவது போல அமைந்திருக்கிறது.