விருதுநகர்

வேலை வாங்கி தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்து தலைமறைவான அதிமுக அமைச்சரை டில்லியில் தேடும் பணி தொடர்கிறது.

அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்துள்ளதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.  இந்த வழக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது 3 உதவியாளர்கள் என நால்வர் மீது  பதியப்பட்ட்து.  ராஜேந்திர பாலாஜி அளித்த முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் தலைமறைவானார்.

அவரை விருதுநகர் காவல்படையின் 8 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.   அவருடன் தொடர்பில் உள்ளதாகக் கூறப்படும் திருப்பத்தூர் அதிமுக நிர்வாகி விக்னேஸ்வர் மற்றும் கோடியூர் ஏழுமலை ஆகியோரிடம் விசாரணை நடந்தது.  விசாரணையில் ராஜேந்திர பாலாஜி டில்லியில் உள்ள ஒரு பாஜக பிரமுகர் வீட்டில் பதுங்கி உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.  இதையொட்டி 3 தனிப்படையினர் டில்லி சென்றுள்ளனர்.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 7 பேர் ரூ. 78.70 லட்சம் வரை பணம் கொடுத்து ஏமாந்ததாகப் புகார் அளித்துள்ளனர்.  இவர்கள் 7 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடங்க உள்ளது.  இந்த விசாரணையின் போது இவர்கள் பணம் அளித்த விவரங்கள் மற்றும் ஆதாரங்களை அளிக்க உள்ளனர்.   அதே வேளையில் பல மாநிலங்களில் ராஜேந்திர பாலாஜியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.