மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த  மதுரை கலெக்டர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதே,  முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு  கேட்டதற்கு சமமானது என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையில், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டும், அரசு அதனை நிறைவேற்றவில்லை. இதனைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. ஓரிரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கோரினர். இருந்தாலும், ஒரு ஆட்சியர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எப்படி 144 பிறப்பிக்கலாம் என கேள்வி எழுப்பிய நீதிபதி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டும் என்றும், உங்களை 144 போட அறிவுறுத்தியது யார் என சரமாரியாக கேள்வி எழுப்பி, அடுத்த விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மதுரையில், இந்திய ஃபார்வர்டு பிளாக் (SIFB) நிறுவனத் தலைவர் திருமாறன் மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரைக்கு வந்த அண்ணாமலையிடம், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள்  கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் மன்னிப்பு கேட்டிருப்பது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினே  மன்னிப்பு கேட்டதற்கு சமம்” எனக் கூறினார்.

அதாவது,  “மாவட்ட ஆட்சியர் என்பவர் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி. எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆட்சியர் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்றால், அது முதலமைச்சரே மன்னிப்பு கேட்டதாகத்தான் பொருள்” என்றார்.

இதையடுத்து, தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து கேள்விக்கு, “இதுதொடர்பான வீடியோவை அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு, அவரது கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்தால், சட்ட ஒழுங்கை காக்கலாம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “டெல்லியிலிருந்து தமிழ்நாடு வரும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் எண்ணம் வேறாகவும், காங்கிரஸ் கட்சியின் எண்ணம் வேறாகவும் உள்ளது.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மீதே நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில்தான் இன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவரின் நிலைமை இருக்கிறது” என்று அவர் விமர்சித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ்ஸை சேர்க்காதது குறித்து கேட்டதற்கு, “யாரும் (ஓபிஎஸ்) தனித்துவிடப்படவில்லை. காலம் இருக்கிறது. காத்திருப்போம். நல்லதே நடக்கும். திமுக ஆட்சியை மக்கள் அகற்ற நினைக்கிறார்கள். அதற்கேற்ற விஷயங்கள் நடக்கும்” என அண்ணாமலை தெரிவித்தார்.

[youtube-feed feed=1]