சென்னை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக போராடியவர்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணிலும் தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியதாக 12 மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தீபம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த ரகுநாத், திருமலை, விவேக் ஆகியோர் உள்ளிட்ட 12 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “நாங்கள் அனைவரும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகளுக்கு எதிராக கண்டன போராட்டத்தை நடத்தினோம். இதற்காக எங்கள் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஏற்கத்தக்கது அல்ல. எனவே, எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி விக்டோரியா கௌரி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
[youtube-feed feed=1]