திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது: திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர்

Must read

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள குறுகிய ரயில்வே மேம்பாலத்துக்கு மாற்றாக புதிய ரயில்வே மேம்பாலம் 6 வழிகளில் ரூ.115.59 கோடியில் கட்டப்பட்டது. இதில், உயர்மட்ட சூழலுடன் கூடிய பேருந்து நிலைய வழித்தடம், அரிஸ்டோ வழித்தடம், மதுரை வழித்தடம், திண்டுக்கல் வழித்தடம், ரயில் நிலைய வழித்தடம், சென்னை வழித்தடம் என பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. திண்டுக்கல் வழித்தடம் முதல் திருச்சி சந்திப்பு வரையிலான பாலப் பணிகள் முடிவடைந்து கடந்த 2016-இல் திறக்கப்பட்டது நிலையில், மதுரை வழித்தடம், பேருந்து நிலைய வழித்தடம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

சென்னை வழித்தடத்தில் தாங்கு தூண்கள், தாங்கு தளங்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. மன்னார்புரம் அருகே ராணுவ நிலம் குறுக்கிடுவதால் பாலம் முழுமைபெறாமல் பாதியில் நிற்கிறது. இதற்காக 2,685.5 சதுர மீட்டர் நிலம் ராணுவத்திடம் பெற வேண்டியுள்ளது. இந்த நிலத்தை பெற்றால் மட்டுமே பணிகளை முடிக்க முடியும். 134 மீட்டர் தொலைவுக்கு தாங்கு சுவர் மட்டுமே கட்டிமுடிக்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு வழங்கிய நிதியை பெறவும் ராணுவ அமைச்சகம் முன்வரவில்லை. அதே தொகைக்கு நிகரான நிலம் மட்டுமே கோருவதால் நிலம் தேர்வு செய்வதில் இருதரப்புக்கும் இழுபறி நிலவி வருகிறது. அந்த இடத்தை பாதுகாப்பு துறை நிராகரித்து விட்டது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் அனுமந்தபுரம் என்ற இடத்தில் நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது. இந்த நிலம் ஒதுக்கீடு தொடர்பான கோப்புகளை பாதுகாப்பு துறைக்கு விரைவாக அனுப்பி வைப்பதற்காக தமிழக வருவாய்த்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தேவைப்பட்டால் முதல்வரையும் சந்தித்து பேசுவேன். தமிழக அரசு அனுப்பிவிட்டால் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி முடங்கி கிடக்கும் இந்த பாலம் கட்டுமான பணியை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுப்பேன்.

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் ரெயில்வே மேம்பால பணியானது 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த பாலம் கட்டுமான பணிக்கு புதிய டெண்டர் விடப்பட்டு உள்ளது. இன்னும் ஏழெட்டு மாதங்களில் அந்த பணியும் நிறைவடையும். நான் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவன். 42 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எம்.எல்.ஏ., எம்.பி, மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் என எத்தனையோ பதவிகளில் இருந்து உள்ளேன். நான் எங்கும் போய்விடவில்லை. எம்.பி.யை காணவில்லை என்று சுய விளம்பரத்திற்காக யாரோ சிலர் தூண்டுதல் பேரில் நான்கைந்து பேர் போலீஸ் நிலையத்துக்கு மனு கொடுக்க சென்றிருக்கிறார்கள். அந்த மனுவையும் போலீசார் வாங்கவில்லை. அந்த நபர்கள் மீது வழக்கு தொடருவேன்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியது அவரது கருத்து. ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒரு கருத்து வெளிப்படும். அந்த வகையில் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி பற்றி அவர் கூறி இருக்கிறார். அப்படி ஒரு கருத்து சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் கூறிய கருத்தும் அதுபோன்றது தான். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது.

வைகோ கூறிய கருத்துக்கு முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில் அளித்த போது கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலையிட்டு 2 பேரிடமும் பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டினார். நானும் வைகோவும் நேற்று முன்தினம் மதுரையில் ஒன்றாக தான் விமான நிலையத்தில் இருந்து வந்தோம். வைகோவுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். தி.மு.க. கூட்டணியில் இப்போது எந்த கருத்து மோதலும் இல்லை, குழப்பமும் இல்லை.

 

More articles

Latest article