சென்னை: சென்னை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி திறந்து வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 5ம் தேதி கோயம்பேடு சந்தைக்கு சீல் வைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
திருமழிசையில் மாற்று இடம் வழங்கப்பட்டு, தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் முடிந்து தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சந்தையில் காய்கறிகள் இருப்பு வைக்கும் இடம், கழிப்பறைகள், வங்கி ஏடிஎம் தற்காலிக அமைக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் 200 கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகளுக்கு இடையே 20 அடி இடைவெளி அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடைக்கும் தனி மின் இணைப்பு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்றிரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு வாகனங்கள் மூலம் 5,000 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதனையடுத்து காய்கறிகள் வாங்க சென்னை புறநகரில் உள்ள சில்லறை வியாபாரிகள் திருமழிசை மார்க்கெட்டுக்கு வர தொடங்கி உள்ளனர்.