சென்னை: திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கட்சி தலைவரான திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் தற்போது எம்.பி.யாக உள்ள நிலையில், அவர் சட்டப்பேரவைதேர்தலில், போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி யின் தலைவர் திருமாவளவன் நேற்று வௌியிட்டார். அதன்படி,
காட்டுமன்னார்கோவில் – திருமாவளவன்,
திண்டிவனம் – வன்னியரசு,
பெரியகுளம் – சக்திவேல்,
கள்ளக்குறிச்சி – மாலதி,
செய்யூர் – சிந்தனை செல்வன்,
திருப்போரூர் – பன்னீர்தாஸ்,
பண்ருட்டி -அப்துல் ரகுமான்,
அரக்கோணம் – எழில் கரோலின்
ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களில் சிந்தனை செல்வத்திற்கு மட்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்போரூரில் வென்ற எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூரில் வென்ற பனையூர் பாபு மற்றும் நாகையில் வென்ற ஆளூர் ஷா நவாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த அறிவிப்பை தொடர்ந்து முகநூலில் தனது தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரலையில் தோன்றி பேசுகையில் ‘‘ஏராளமானோர் விருப்பமனுக்களை அனுப்பி இருந்தீர்கள், அனைத்தையும் பரிசீலனை செய்து முடிவெடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.
பல தோழர்களுக்கு வாய்ப்பு கிடைக்க பெறாமல் இருப்பது வருத்தமளிக்கும். உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றேன். மேலும், மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்த தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. அதனால் தான் நான் போட்டியிடுகின்றேன்’’ என்றார்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிட்டு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் அதிமுகவின் நா.முருகுமாறன் 48,450 ஓட்டுகள் பெற்றார். திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர், 2019, 2024ம் ஆண்டுகளில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]