இன்னும் மூன்று மாதங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி உறுதி செய்யப்படவில்லை.

தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை, தங்கள் அணியில் சேர்க்க தி.மு.க. முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “பா.ம.க. இடம் பெறும் அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு போதும் இடம் பெறாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன் “நாங்கள் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருக்கிறோம். எங்களுக்கு தேர்தல் ஆணையம். கடைசி நேரத்தில் தான் தேர்தல் சின்னத்தை ஒதுக்குகிறது, உரிய நேரத்தில், அந்த சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இதனை தவிர்ப்பதற்காகவே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. ஆலோசனை வழங்கி உள்ளது. எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து சரியான நேரத்தில் பரிசீலனை செய்வோம்” என திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி