டில்லி

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பிஎம் கேர் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.   இதில்  நேற்று நான்காம் நாள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான விவாதம் நடந்தது.    இந்த விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பேசினார்.

திருமாவளவன், “நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு பிடித்தம் செய்தது. இந்த பிடித்தம் செய்யப்பட்ட நிதியிலிருந்து மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அதைப்போலப் பிரதமர் பெயரில் (பிஎம் கேர்) நிதி திரட்டப்பட்டது. ஆனால் எவ்வளவு நிதி திரட்டப்பட்டது,  பொதுமக்கள் மத்தியில் அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்கிற சந்தேகம் மிகப்பெரிய கேள்வியாக மேலெழுந்துள்ளது. ஆகவே அரசு இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டும்.  அதாவது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

உச்சநீதிமன்றம் கொரோனாவுக்கு பலியான 4 லட்சம் குடும்பத்திற்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளது.  அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.   தவிர பேரிடரில் உயிரழந்தோருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கலாம் எனச் சட்டத்தில் இடமிருக்கிறது.  ஆகவே கொரோனா தொற்றை இயற்கை பேரிடராகக் கருதி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.

எனது இரண்டாவது கோரிக்கையாக, செங்கல்பட்டில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் நோய்த் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை அரசு கட்டியுள்ளது.  இந்நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லை. மேலும் சிறிது முதலீடு செய்து இதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

எனது இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அதேநேரத்தில் ஓமிக்ரான் தொற்றைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.” என வலியுறுத்தி உள்ளார்.