சென்னை :
தி.மு.க. தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
“திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தேன். எனது பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆகத்து 17 ஆம் தேதி அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். ஆனால் அன்று அவர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். எனவே இன்று அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது
நான் சந்தித்த போது பேராசிரியர் அன்பழகன் அவர்களும் திரு.மு.க.தமிழரசு அவர்களும் உடனிருந்தனர். சால்வை அணிவித்துவிட்டு நான் கொண்டு சென்ற புத்தகம் ஒன்றை அவருக்கு அளித்தேன். அது ‘வியப்புக்குரிய ஆளுமை கலைஞர்’ என்னும் தலைப்பில் அவரைப்பற்றி அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
‘நான் திருமாவளவன்’ என்று என் பெயரைச் சொன்னதும் நிமிர்ந்து பார்த்தார். நன்றாக என்னை உற்று கவனித்தார். ஏதோ பேசுவதற்கு முயற்சித்து வாயசைத்தார். மேலும், அவரது வலது கையை உயர்த்தினார். நான் அவரது கையைப் பற்றிக்கொண்டேன். அவரும் எனது கையை லேசாக அழுத்திப் பிடித்ததை என்னால் உணர முடிந்தது. சில நொடிகள் நான் அவரது முகபாவனைகளைக் கவனித்தேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டதாக என்னால் உணர முடிந்தது.
திரு.மு.க.தமிழரசு மற்றும் அவரது உதவியாளர்களும் அந்தக் காட்சியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நானும் பூரிப்படைந்தேன்.
பின்னர் தலைவர் கலைஞரிடம் ‘நான் போய் வருகிறேன்’ என்று சற்று உரத்துக் கூறினேன். அதனைப் புரிந்துகொண்டு என்னை பார்த்தவாறே ‘போய் வாருங்கள்’ என தலையசைத்தார்.
கலைஞர் மிகவும் நலமுடன் இருக்கிறார். என்னை அடையாளம் கண்டுகொண்டார். வழக்கம் போல அவருடைய வாழ்த்து கிடைத்ததாக எண்ணிப் பெருமகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் ஒரு ‘மகத்தான ஆளுமையின்’ உடல்நிலை குறித்து எனக்குள் நீங்காத ஒரு வலி இருக்கவே செய்கிறது.” இவ்வாறு தனது அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.