நியூஸ்பாண்ட்

டராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், நடராஜன் மற்றும் சசிகலாவை வானளாவ புகழ்ந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரனையும் வாழ்த்தினார். இதையடுத்து தினகரனுடன் திருமாவளவன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தஞ்சையில் நடைபெற்றது. பழ. நெடுமாறன் நிகழ்வுக்குத் தலைமை தாங்க, கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு படத்தைத் திறந்து வைத்தார். நடராஜன் நினைவு மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் கொண்டார்.

திருமா – தினகரன்

திருமாவளவன், சீமான், தா.பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர். மற்றவர்கள் நடராஜனின் தமிழ்ப்பற்று, மனிதநேயம் குறித்து புகழ்ந்து பேசிய நிலையில், அதையும் தாண்டி நடராஜன் மற்றும் சசிகலாவை வானளாவ புகழ்ந்து பேசினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

“தன்னுடைய நேர்மறை அணுகுமுறையால் எதிரியையும் வளைத்துப்போடும் திறமை வாய்ந்தவராக விளங்கினார் எம். நடராஜன்.

அவரை சரியாகப் புரிந்துகொண்டவர்களுக்கு அவர் எம். என். ஆக விளங்கினார். அவரை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு எமனாகவும் விளங்கினார்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து தியாகம் புரிந்தவர் அவர். தான் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்ட சசிகலாவை பிரிந்து முப்பது வருடங்கள் வாழ்ந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, இனியாவது சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து அழைத்து வந்து வீடு பார்த்து தனியாக வாழ வேண்டும் என்று நெருக்கமானவர்களிடம் கூறிக்கொண்டிருந்தார்.

தமிழகத்துக்கு ஒரு ஆளுமை வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கைத் துணையை அர்ப்பணித்தார்” என்று நடராஜனின் தனிப்பட்ட வாழ்க்கைத் தொட்டவர் திருமா மட்டுமே.

மேலும், “ஜெயலலிதா அ.தி.மு.க.வைக் காத்தார். ஜெயலலிதாவை நடராஜனும் சசிகலாவும் காத்தார்கள். இன்று ஜெயலலிதாவின் சாதிப்பெயரைச் சொல்லி அவரை தங்களவராக நினைப்பவர்கள், அவரது சிரமமான காலகட்டத்தில் உடன் இல்லை. ஆனால் சசிகலாதான் உடன் இருந்தார். அவர் நினைத்தால் ஜெயலலிதாவை காட்டிக்கொடுத்திருக்கலாம். அப்ரூவராக மாறியிருக்கலாம். ஆனால் அனைத்துத் துன்பங்களையும் தாங்கி ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருந்தார்.

நினைவேந்தல் நிகழ்வு

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, தனது படம் வெளியாகக்   கூடாது என  விரும்பினார். அந்த நேரத்தில் சசிகலாவை நோக்கி எத்தனையோ புகார்கள் வீசப்பட்டன. ஆனால் தோழியின் விருப்பத்தை நிறைவேற்ற, படங்களை வெளியிடாமல் இருந்தார் சசிகலா” என்றும் திருமாவளவன் பேசினார்.

மேலும் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக” தலைவர் தினகரன் திறமை வாய்ந்தவர்” என்றும் புகழ்ந்தார்.

இந்நிகழ்வில் திருமாவின் பேச்சுத்தான் அனைவரையும் கவனிக்க வைத்தது.  “சசிகலா குடும்பத்தினர் மீது இத்தனை பற்றுடன் பேசுகிறாரே” என்று அனைவரையும் எண்ண வைத்தது.

மேலும், சில நாட்களுக்கு முன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சசிகலாவை சந்தித்ததாகவும், அப்போது சசிகலா, “இப்போதைக்கு எடப்பாடி எதிரியாக இருக்கலாம். ஆனால் நிரந்தர எதிரி நமக்கு தி.மு.க.தான். நீங்கள் அந்தப்பக்கம் இருக்கிறீர்களே..! நம் பக்கம் வந்துவிடுங்கள். திருமாவும் நம் பக்கம்தான் இருக்கிறார்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆகவே வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலேயே தினகரன் பக்கம் திருமா வரக்கூடும் என்ற யூகம் எழுந்துள்ளது.