சென்னை: கோயில் திருப்பணிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் “திருக்கோயில் திருப்பணி கையேடு” வெளியிடப்பட்டு உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்துவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கி வருகிறது. அனைத்துத் திருக்கோயில்களையும் முறையாகப் பராமரித்து, பாதுகாத்து மேம்படுத்துவது இத்துறையின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.

திருக்கோயில் திருப்பணி என்பது திருக்கோயில் மற்றும் அதனைச் சார்ந்த கட்டிடங்களின் கட்டுமானங்களைப் பழுதுபார்த்தல், பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கியதாகும். திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் பழமை வாய்ந்த தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கட்டடக் கலைகளின் சான்றாவணங்களாகவும் திகழ்கின்றன.

இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின் கீழ், அறநிறுவனங்களின் சொத்துகள் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் விதிகளின்படி, திருக்கோயில்களை முறையாகப் பராமரித்தல், பாதுகாத்தல். புதுப்பித்தல் போன்ற பணிகளில் பின்பற்றிட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், திருக்கோயில் திருப்பணிகளை விரைவாகவும், முறையாகவும் செயல்படுத்துவதற்குத் திறமை மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் ஸ்தபதிகள் மூலம் செயல்படுத்துதல் குறித்தும் பல்வேறு சுற்றறிக்கைகள் வாயிலாக அனைத்துச் சார்நிலை அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணி செய்வதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கிடும் வகையில் “திருக்கோயில் திருப்பணி கையேடு“ துறையால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இக்கையேட்டில் திருக்கோயில் திருப்பணி வேலைகளை தொடங்குதல், திருப்பணிகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், ஆவணப்படுத்துதல் மற்றும் அதற்கான முறைகள், திருப்பணிகளை அடையாளப்படுத்துதல் மற்றும் தொல்லியல் வல்லுநர் கருத்துரு பெறுதல், திட்ட மதிப்பீடு தயாரித்தல்,  மண்டல  மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுக்களின் ஒப்புதல் பெறுதல், வரைப்பட அங்கீகாரம் பெறுதல், மதிப்பீடு தயார் செய்தல் மற்றும் அதில் இடம் பெறவேண்டிய இனங்கள், நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெறுதல், ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள், உபயதாரர் திருப்பணி, பணி ஆணை வழங்குதல், பணி உடன்படிக்கை எற்படுத்துதல், பணிகளை தொடங்கி வைத்தல், பணித்தளம் ஒப்படைத்தல், தரக்கட்டுப்பாடு படிவங்கள், அளவீட்டு புத்தகம் பதிவு செய்தல், பொறியாளர்களால் சரிபார்த்தல், பட்டியல் தயாரித்தல், பணிமுடிவு அறிக்கை, புகைப்படங்களுடன் பணி முன்னேற்றங்களை உறுதிப்படுத்துதல், பாலாலயம், சைவ மற்றும் வைணவ திருக்கோயில்களுக்கான நடைமுறைகள் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், திருக்குட நன்னீராட்டு பெருவிழா, குடமுழுக்கின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், திருக்கோயில் பராமரிப்பு, நிதி ஆதாரம், திருக்குளங்களை  சீரமைத்தல், திருத்தேர் புனரமைத்தல், உபயத் திருப்பணி, துறையின் நிதி விடுவித்தல் போன்ற நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இக்கையேடு இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைத்துச்  சார்நிலை அலுவலர்களுக்கும் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில் திருப்பணி நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இறையன்பர்கள், உபயதாரர்கள், பொதுமக்கள் இக்கையேட்டினை ஆணையர் அலுவலகம் மற்றும் 48 முதுநிலைத் திருக்கோயில்களில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையங்களில் சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.