திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அமைந்துள்ளது.

மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர்.

மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது.

எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாககாலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார் என்று தல புராணம் கூறுகிறது. சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள் காலனை கடிந்த இந்த வீரச் செயலும் ஒன்று.

எம பயம் நீக்கும் தலங்கள் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.

மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.