சென்னை:

பசுர குடிநீரை குடிக்க அறிவுரை வழங்கியதால் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக இணையதளங்கள் மற்றும் ஊடகங்களில் தெரிவித்த  சித்தவைத்தியர் திருத்தணிகாசலத்தை கடந்த 6ஆம் தேதி சென்னை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்ததுடன் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

அவர், ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்து மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், திருத்தணிக்காசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அதையடுத்து, தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதி,  கபசுர குடிநீரை குடிக்க அறிவுரை வழங்கியதால் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டாரா.? திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா?  என்பது குறித்து  உள்துறை செயலாளர், காவல் ஆணையர் பதில் தர உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.