கொரோனா இரண்டாவது அலை தற்போது இந்தியாவையே புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மூன்றாவது அலையை நாம் தவிர்க்க முடியாது என்று மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே. விஜயராகவன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதுடன் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வரும் நிலையில் முக்கிய அதிகாரிகளுடன் அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
இந்த வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வரும் வேகத்தை வைத்து பார்க்கும் போது மூன்றாவது அலை கண்டிப்பாக தவிர்க்க முடியாது, அதுபோல் மூன்றாவது அலை எப்போது வரும் எந்த கால இடைவெளியில் வரும் என்று தெளிவாக கூறமுடியாது.
தற்போது, இந்தியாவில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனாவை சமாளிக்கும் வகையில் தடுப்பூசிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தியாவாய் துவம்சம் செய்துகொண்டிருக்கும் இந்த இரண்டாவது அலையால் கடந்த வாரம் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சுமார் பாதியளவு பாதிப்பு இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது.
முழு ஊரடங்கு மட்டும் தான் ஒரே தீர்வா என்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிட்டி (நி…..) ஆயோக் தலைவர் வி.கே. பவுல்-லிடம் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு “நோய் பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே மாநில அரசுகளுக்கு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, இருந்தபோதும், மேற்கொண்டு என்ன செய்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது” என்று கூறினார்.
இரண்டாவது அலை நாட்டை சீரழித்து வருவதற்கு தேர்தல் பேரணிகள் மற்றும் கும்பமேளா போன்ற மத சம்பந்தமான ஜனத்திரள் காரணமாகி விடக்கூடாது என்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவுரை வழங்கி இருந்தது, இருந்தபோதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் செயல்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சியினர் பலரும் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதும், பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்து விடக்கூடாது என்பதால் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்த தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.