டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவமும் ஈடுபட்டுள்ளது. இதற்காக 4 போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலை யில், 3 விமானங்கள் டெல்லி வந்தடைந்துள்ளன.   போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ள  மாணவர்களை பாதுகாப்புத் துறை இணை மந்திரி அஜய் பட் வரவேற்றார்.

உக்ரைன் மீது ரஷியா இன்று 8வது நாளாக போரிட்டு வருகிறது. முன்னதாக பிப்ரவரி 24ந்தேதி உக்ரைன் மீதான போர் தொடங்கியவுடன், உக்ரைன் தனது வான்பகுதியை மூடிவிட்டது. இதனால், அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டவர்கள், அங்கிருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. உக்ரைனில் ஏராளமான இந்தியர்களும், இந்திய மாணவர்களும் உள்ள நிலையில், அவர்களை  மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து  மாற்று திட்டமாக, உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவாகியா  நாடுகளுடன் பேசி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அங்கு வரவழைத்து, பின்னர் இநதிய மீட்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இதற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரிட்டுள்ள இந்திய அரசு, மீட்பு பணியை மேற்பார்வையிட 4 மத்திய மந்திரிகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறார். மீட்பு பணியில்  இந்திய அரசு மற்றும் வெளியுறவுத்துறை 24 மணி நேரமும் இயங்கி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆபரேசன் கங்கா மூலம்  இதுவரை 8000க்கும் அதிகமான இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைந்து மீட்கும் பொருட்டு, விமானப்படை விமானங்களும் களம் இறக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அழைப்பின் பேரில், விமானப்படைக்கு சொந்தமான சி17 ரக 4 விமானங்கள் இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி முதல்விமானம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து மாணவர்கள் உள்பட 200 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான முதல் விமானம் டெல்லிக்கு அருகில் உள்ள ஹின்டன் விமானப் படை தளத்தில் நேற்றிரவு தரை இறங்கியது. பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மாணவர்களை வரவேற்று, அவர்களுடன் கலந்துரையாடினார்.

அதைத்தொடர்ந்து 2வது உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 208 இந்தியர்களுடன் போலந்து நாட்டின் ரெஸ்ஸோவில் இருந்து புறப்பட்ட சி17 ரக போர் விமானம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

போலந்தில் இருந்து 208 பேருடன் புறப்பட்ட 3-வது போர் விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. 4வது விமானம் இன்று முற்பகலுக்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.