சென்னை

ன்னும் இரு வருடங்களில் மூன்றாவது கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டு தினமும் 15 கோடி லிட்டர் நீர் சென்னைக்கு கிடைக்க உள்ளது.

சென்னை நகரில் குடிநீர் பஞ்சம் மிகவும் அதிகரித்துள்ளது. நகரின் முக்கிய நீர் ஆதாரங்கள் மிகவும் வற்றிய நிலையில் உள்ளன. எனவே மாற்று வழிகள் குறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாகம் ஆய்ந்து வருகிறது. தற்போது நெமிலி மற்றும் மீஞ்சூர் ஆகிய இரு இடங்களில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்கள் மூலம் தற்போது கிடைக்கும் குடி நீர் போதுமான அளவுக்கு இல்லை.

எனவே மூன்றாவது கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டது. இதை ஒட்டி கடந்த 2016 ஆம் வருடம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது. ஆனால் ஒப்பந்த தாரரில் ஒருவர் மற்ற நபர்கள் இந்த பணிக்கு தகுதி குறைந்தவர்கள் என  வழக்கு தொடர்ந்ததால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த மார்ச் மாதம் வாரியத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

அதை ஒட்டி மே 25 அன்று இந்த மூன்றாவது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட இந்த மூன்றாம் நிலையம் அமைக்கும் பணி நெமிலியில் தற்போது தொடங்கி உள்ளது. இந்த பணி இன்னும் இரு வருடங்களுக்குள் முடிவடையும் என அரசு அறிவித்துள்ளது. இந்த பணிகளை விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த மூன்றாவது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தினமும் 15 கோடி லிட்டர் குடிநீர் வழங்க உள்ளது.   இதை தவிர நான்காம் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையம் போரூரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு இந்த வருட இறுதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படலாம் என தெரிய வந்துள்ளது.