“தமிழக முதல்வராக விரைவில் டி.டி.வி.தினகரன் பதவியேற்பார்”  என்று நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரை தெரிவித்திருந்த நிலையில், இப்போது இன்னொரு எம்.எல்.ஏவும் அதே கருத்தை வழிமொழிந்திருக்கிறார்.

நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனது தொகுதிக்கு  வந்தார். அப்போது அவர், “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, டி.டி.வி. தினகரன் கட்சிப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.  அவரால்தான் தேனி, பெரியகுளம் பகுதிகளில் கட்சி வளர்ந்தது. அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் காலம் தூரத்தில் இல்லை” என்று தெரிவித்தார்.

இது, முதல்வர் எடப்பாடி தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

சமீபத்தில் மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வரான  சில நாட்களிலேயே “சசிகலா முதல்வர் ஆவார்” என்று சொன்னவர் இதே தங்கதுரைதான்.

இந்த நிலையில், தேனியில் அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கத் தமிழ்செல்வன், கதிர்காமு, ஜக்கையன் ஆகியோர் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள், “முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வாக உள்ள போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். இந்தத் தொகுதியில் டி.டி.வி.தினகரன் நின்று ஜெயிப்பார்” என்று பேசினர்.

ஏற்கெனவே எம்.எல்.ஏ. தங்கதுரை, “தினகரன் முதல்வர் ஆவார்” என்று கூறியதும், இப்போது இந்த எம்.எல்.ஏக்கள், “போடியில் நின்று தினகரன் வெற்றி பெறுவார்” என்று தெரிவித்திருப்பதும் எடப்பாடி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.