மும்பை:

மும்பை உள்ளூர் மின்சார ரெயில்களில் பயணிகளை தாக்கி செல்போன் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

மும்பையில் சர்ச்கேட் பகுதி உள்ளூர் மின்சார ரெயிலில் மிலோனி பரேக் (வயது 18) என்ற பேஷன் டிசைனிங் மாணவி தனது தாயுடன் நேற்றிரவு 10.30 மணிக்கு கண்டிவாலி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த மாணவியிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றான்.

அந்த மாணவி செல்போனை பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் அந்த மர்ம நபர் அந்த பெண்ணை ரெயில் படிக்கட்டு வரை தரதரவென இழுத்துக் கொண்டே சென்றுள்ளார். தொடர்ந்து போராட முடியாததால் எந்த பெண் செல்போனை விட்டுவிட்டார். இதையடுத்து அந்த மர்ம நபர் செல்போனுடன் தப்பிச் சென்றுவிட்டார். இவை அனைத்தும் 20 விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டது.

இதையடுத்து பந்த்ரா ரெயில்வே போலீசில் பரேக் புகார் செய்தார். போலீசார் திருட்டு மற்றும் தாக்குதல் தொடர்பாக 379, 356 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். மும்பை உள்ளூர் மின்சார ரெயில்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 2017ம் ஆண்டில் 800 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016ல் வெறும் 62 சம்பவங்கள் மட்டுமே புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதே 2017ல் 496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை உள்ளூர் ரெயில்களில் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருடும் நபர்கள் செல்போனை பறித்துக் கொண்டு ஓடும் போது பாதிக்கப்படும் பயணிகளுக்கு காயம் ஏற்படுகிறது. அடுத்ததாக குச்சியால் பயணிகளை அடித்து செல்போன்களை பறிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

பெரும்பாலான செல்போன் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக முன்பு வழக்குப் பதிவு செய்யப்படாத நிலை இருந்து வந்தது. இதற்கு பதிலாக செல்போனை தவறவிட்டதற்கான சான்றிதழ் மட்டுமே வழங்கும் நடைமுறை மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.