இஸ்ரோவின் தலைவராக இருந்து சந்திராயன் – 2 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கும் சிவன், விவசாய வேலைகளுக்கு உதவியாக இருப்பதற்காக அவரது தந்தையால் வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே சேர்க்கப்பட்டார்.
இவரின் குடும்பத்திலேயே இவர்தான் முதல் தலைமுறை பட்டதாரி. இவரின் சகோதரர் மற்றும் சகோதரிகள் வறுமை காரணமாக மேற்படிப்பை நிறைவுசெய்ய முடியவில்லை. இவர், தந்தைக்கு விவசாய வேலைகளில் உதவியாக இருந்த காரணத்தாலேயே, வீட்டிற்கு அருகில் இருந்த கல்லூரியில் தந்தையால் சேர்க்கப்பட்டார்.
இவர் தனது பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில்தான் கற்றார். நாகர்கோயிலில் உள்ள எஸ்டி இந்து கல்லூரியில் இளநிலைப் படிப்பை முடித்தார். பி.எஸ்சி. கணிதப் படிப்பில் 100% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
சென்னை எம்ஐடி அரசு கல்வி நிறுவனத்தில் ஏரோநாடிகல் படிப்பில் சேர்ந்தார். அதுவரை வேஷ்டி மட்டுமே அணிந்த அவர், அப்போதுதான் முதன்முதலாக பேண்ட் அணியும் வாய்ப்பைப் பெற்றார்.
கடந்த 1980ம் ஆண்டு ஏரோநாடிகல் படிப்பை நிறைவுசெய்த சிவன், பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி கல்வி நிறுவனத்தில் முதுநிலை பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். பின்னர், கடந்த 2006ம் ஆண்டு ஐஐடி – மும்பையில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.
முதுநிலைப் படிப்பை முடித்தவுடன் கடந்த 1982ம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 2018ம் ஆண்டு இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் முன்னதாக, விக்ரம் சாராபாய் வானியல் மையத்தின் இயக்குநராக பொறுப்பு வகித்தார்.
கிரையோஜெனிக் இன்ஜின், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்றியதால், இவர் இஸ்ரோவின் ராக்கெட் மனிதன் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு தமிழின் சிறந்த பாடல்களைக் கேட்பதும், தோட்டப் பராமரிப்பும் பிடித்த விஷயங்கள். இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா கடந்த 1969ல் நடித்த ஆராதனா இவருக்கு மிகவும் பிடித்தப் படம்!