“மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற ஒரு சொல்லாடல் நெடுங்காலமாகவே பயன்பாட்டில் உண்டு. அதுவும் தமிழகத்தில் அந்த சொல்லாடலுக்கு ஒரு சிறு வரலாறே உண்டு என்றுகூட சொல்லலாம்.

உலகைப் புரட்டிப்போட்ட இயக்கவியல் பொருள்முதல்வாத சித்தாந்தமான மார்க்சியத்தை, அந்தந்த நாட்டின் சூழல்களுக்கேற்ப அதன் தொண்டர்கள் மாற்றியமைத்து செயலாற்றி வெற்றிகாண வேண்டுமென்பதே இதன் அர்த்தம்!

ஆனால், இந்தியாவில் மார்க்சியம் நுழைந்தபோதே அது புதியப் பிரச்சினைகளை சந்தித்தது. அதாவது, ஆதிக்கவாதிகளே அந்த சித்தாந்தத்தை வரித்துக்கொண்டதாகப் புகார்கள் எழுந்தன. இதன்மூலம், இந்தியாவில் பிரதானமாக இருந்த சாதியப் பிரச்சினைகள் மூடி மறைக்கப்பட்டு, வர்க்கம் என்ற அம்சம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதாய் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவில், மார்க்சியம் மண்ணுக்கேற்ற வகையில் மாறவில்லையா? என்ற விமர்சனம் அதிக கவனம் கொடுக்கத்தக்க ஒன்றாக சமீப காலங்களில் மாறியுள்ளது. அதற்கு காரணம், தேர்தல் முடிவுகள்..!

கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திய அல்லது கம்யூனிஸ்டுகள் மிகவும் செல்வாக்காக விளங்கும் மாநிலங்களில், அதற்கு நேர் எதிர் சக்தியான பாரதீய ஜனதா வளர்ந்துவரும் அல்லது ஆட்சியைப் பிடிக்கும் போக்குதான் “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற சொல்லாடலை விவாதிக்க நம்மைத் தூண்டியிருக்கிறது.

முதலில் திரிபுராவை எடுத்துக்கொள்வோம். இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த ஒரு சிறிய மாநிலம்தான் அது. கடந்த 1993ம் ஆண்டு முதல் 2018 வரை மொத்தம் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக இங்கே கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வந்தது. அதற்கு முன்பும் 1978 முதல் 1988 வரை பத்தாண்டுகள் இடதுகளின் ஆட்சிதான். கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிட்டத்தட்ட சமமான எதிர்க்கட்சி எதுவென்றால் காங்கிரஸ். 1977 வரை அம்மாநிலத்தில் காங்கிரஸ் ராஜ்ஜியம்தான். பாரதீய ஜனதாவுக்கு அந்த மாநிலத்தில் எந்த அடையாளமுமில்லை.

அதாவது, அந்த சிறிய மாநிலத்தின் நிலவரப்படி, கட்சி அடையாளத்தைவிட, சிறிய சிறிய தலைவர்களுக்குத்தான் செல்வாக்கு! கம்யூனிஸ்ட்டுகள் எத்தனை ஆண்டுகள் ஆண்டாலும், எளிய முதல்வர் என மாணிக் சர்க்கார் பெயரெடுத்தாலும், அம்மாநில மக்கள் நேரெதிர் சக்தியான பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்கும் அளவிற்கே தயார் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாகிறது.

அடுத்து கேரளாவிற்கு வருவோம். படித்தவர்கள் மற்றும் அறிவாளிகள் அதிகமுள்ள மாநிலமாக தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வரும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு நாமெல்லாம் அறிந்ததே. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சியைப் பிடிக்கும்.

ஆனால், அத்தகைய கேரளாவில் பாரதீய ஜனதாவின் வளர்ச்சி எப்போதுமே குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் சபரிமலை போன்ற அம்சங்களை முன்வைத்து அக்கட்சியால் பெரிய பிரச்சினைகளை செய்ய முடிகிறது. பெரிய பேரணிகளையும்கூட நடத்த முடிகிறது. மோடியும் தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவனந்தபுரத்திலிருந்து தொடங்கும் அளவிற்கு அந்த மாநிலம் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில்கூட அம்மாநிலத்தில் அக்கட்சிப் பெற்ற வாக்குகள் 16%(தனித்து நின்று) என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்தை எதிர்காலத்தில் வளைப்பதற்கு திட்டமிட்டு, ராஜ்யசபா உறுப்பினராக உள்ள அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் முரளிதரனுக்கு மத்திய அமைச்சர் பதவியையும் கொடுத்துள்ளது பாரதீய ஜனதா.

முதன்முதலில் தேர்தல் முறையில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைத்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றாலும், கம்யூனிஸ்டுகள் தொடர்ச்சியாக செல்வாக்கை தக்க வைத்துவரும் மாநிலம் என்றாலும், நேரெதிர் சக்தியான பாரதீய ஜனதாவால் அங்கே உறுதியாக வளர முடிகிறது.

அடுத்தது மேற்குவங்கம். 1960களில் ‘வசந்தத்தின் இடி முழக்கம்’ தோன்றிய மாநிலம் என்றாலும், அதற்கு முன்னரே வலுவான கம்யூனிஸ அடையாளங்களைப் பெற்ற மாநிலம்! கடந்த 1977ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த கம்யூனிஸ்டுகள், தொடர்ந்து 33 ஆண்டுகள் கோலோச்சினார்கள்! பின்னர் 2011ம் ஆண்டுதான் திரிணாமுல் காங்கிரசிடம் ஆட்சியைப் பறிகொடுத்தனர். ஆனால், உடனேயே முடங்கிவிட்டனர். மீண்டெழுந்து பெரிய போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதெல்லாம் கிடையாது என்ற நிலைதான். ஆனாலும், அங்கே காங்கிரஸ்(திரிணாமுல்) – கம்யூனிஸ்ட் என்ற நிலைதான் தொடர்ந்து நீடிக்கும் என்று நினைத்தவர்களுக்கு, இந்த மக்களவைத் தேர்தல் பெரிய அதிர்ச்சியைப் பரிசளித்தது. மொத்தமுள்ள 42 மக்களவை இடங்களில், 18 இடங்களைப் பிடித்துவிட்டது பாரதீய ஜனதா.

தற்போது, அடுத்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, பிரஷாந்த் கிஷோர் உதவியை நாடும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார் மம்தா பானர்ஜி. மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா இந்தளவிற்கு வெல்வதற்கு காரணம், கம்யூனிஸ்ட் வாக்குகளின் ஒரு கணிசமான பகுதி பாரதீய ஜனதாவிற்கு மடை மாறியதுதான் என்கிறார்கள். அதாவது, பாரதீய ஜனதா வென்றாலும் பரவாயில்லை, மம்தா தோற்றால்போதும் என்ற அளவிற்கு கம்யூனிஸ வாக்கு வங்கியின் உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கே, கம்யூனிஸ்ட் கட்சி தேய தேய, பாரதீய ஜனதா வளர்ந்து வருகிறது.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முகுல் ராய் போன்ற சில பல குறிப்பிடத்தக்க தலைவர்கள் பாரதீய ஜனதா முகாமுக்கு மாறியதும் முக்கிய காரணங்களாக கொள்ளப்படுகிறது. அங்கேயும், திரிபுராவைப் போன்று, சித்தாந்த கட்டமைப்பைவிட, கட்சித் தலைமையைவிட, சில பல தனி நபர்களுக்குத்தான் செல்வாக்கு அதிகம் போலும்.
நாம் இப்போது தமிழ்நாட்டின் நிலைமையையும் சற்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கடந்த 1917ம் ஆண்டில் நீதிக்கட்சியின் காலத்திலிருந்தே தமிழகத்தில்(சென்னை மாகாணம்) நிலைமை மாறத் தொடங்கியது. பல்வேறு காரணிகளால் நீதிக்கட்சி வலுவிழக்கத் தொடங்கியபோது, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வேறு வகையில் தமிழகத்தின் சமூகப் போக்கையும் சமூக சிந்தனையையும் கட்டமைத்து வந்தது. திராவிடக் கருத்தாக்கம் வலுப்பெற்றபோதும், காமராஜர் போன்ற ஆளுமைகளால் தமிழகத்தில் காங்கிரஸ் தாக்குப் பிடித்தது. அதுவும் 1967 வரையே.

திமுக அரியணை ஏறி, அண்ணாவிற்கு பிறகான காலகட்டத்தில் அதிரடி காட்டிய கருணாநிதியை தட்டிவைக்க, இந்திரா காந்தி உள்ளிட்டோர் செய்த முயற்சியால் நீர்த்துப்போன திராவிடமான அதிமுக உதயமானது. திமுகவே ஒரு நீர்த்துப்போன திராவிடம்தான் என்றாலும், அதிமுக அதைவிட மிக மோசம். என்னதான் நீர்த்துப்போனாலும் சில அடிப்படைகளிலிருந்து அவர்கள் விலகவில்லை.

ஆக, தமிழகம் குறைவாக நீர்த்துப்போன திராவிடம் – அதிகமாக நீர்த்துப்போன திராவிடம் ஆகிய இரண்டுக்குமான களமாக மாறியபோதிலும், தமிழகத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொது மனநிலை என்பது மிக முக்கியமானது. அந்தப் பொது மனநிலை ஒருவகையில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டும் வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த இடத்தில்தான் அரசியல் இயக்கங்கள் என்பதைத் தாண்டி, அரசியல் சாராத இயக்கங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

திராவிடர் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம், தமிழ்தேசிய பொதுவுடமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் சாராத இயக்கங்களுக்கு இந்த மனநிலையைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்குண்டு. திராவிட எதிர்ப்பையும், இனவாத தமிழ்தேசியத்தையும் பேசிவரும் நாம் தமிழர் கட்சியும்கூட, பாரதீய ஜனதா எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறது.

இத்தகைய ஒரு மனநிலை கட்டிக்காக்கப்படுவதால்தான், மிதநிலை(soft) இந்துத்துவா கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாய் சொல்லப்படும் அதிமுக, பல்வேறு விஷயங்களில் பாரதீய ஜனதாவிடம் அடிபணிந்து போனாலும், இன்னும் கரைந்துவிடாமல் தாக்குப்பிடிக்க முடிகிறது.

உலக நாடுகளுக்கெல்லாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் சென்றுவரும் மோடியால் தமிழகத்திற்கு வந்து செல்வது ஒரு தொடர்ந்த சவாலாகவே இருக்கிறது. கேரளாவுக்குள் எவ்வித பிரச்சினையுமின்றி சுற்றிவந்த ராம ரத யாத்திரை, தமிழகத்திற்குள் எதற்கடா நுழைந்தோம்? என்று நினைத்து தப்பி ஓடும் நிலை ஏற்பட்டது.

சமூகவலைதளங்களில் மோடியும், பாரதீய ஜனதாக் கட்சியும் இந்தளவிற்கு வறுபடுவது தமிழகத்தில்தான். மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவையே கிண்டல் செய்யும் வகையில் ‘நேசமணி டிரெண்டிங்’ உருவானதும் தமிழகத்தில்தான். தமிழகத்தில் இயங்கும் பல ஜனரஞ்சக மீடியாக்கள் பாரதீய ஜனதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும், சமூக வலைதளங்களின் உதவியுடன் பல விஷயங்கள் சாதிக்கப்படுகின்றன.

இங்கே, ஒரு குறிப்பிட்ட கட்சி தோற்றால் போதுமென நினைத்து யாரும் பாரதீய ஜனதாவிற்கு ஓட்டுப்போட்டு விடுவதில்லை. வேறு கட்சிகளிலிருந்து ஒருசில தலைவர்கள் விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்துவிட்டால், அவர்களுக்காகவெல்லாம் வாக்குகள் விழுந்துவிடுவதில்லை. அந்தவகையில், தனிமனித கவர்ச்சி(தலைமை மட்டும்) அரசியலால் தமிழ்நாட்டிற்கு ஒரு நன்மையே! தமிழ்நாட்டில் யாரை வைத்தும் பாரதீய ஜனதாவால் ஊடுருவ முடியவில்லை. சில லெட்டர் பேடு ஜாதியக் கட்சித் தலைவர்கள்(!) தவிர, வேறு யாரையும் பாரதீய ஜனதாவால் ஒன்றும் செய்துவிட முடிவதில்லை. தமிழ்நாட்டில் கவுரவமான முறையில் ஒரு பொதுக்கூட்டத்தைக்கூட அக்கட்சியால் நடத்திட முடியவில்லை.

இங்குதான் ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்’ என்ற சொல்லாடல் மீண்டும் வருகிறது. சில மாநிலங்களில் மிகப்பல ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், அங்கே மக்களின் மனநிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற அவர்களின் தோல்வி பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது. கம்யூனிசத்தைக் கைப்பற்றிய மேட்டுக்குடியினர் தொடர்ந்து அந்த மனநிலையிலேயே செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு தவறாமல் வலு கிடைத்து வருகிறது.

தமிழ்நாட்டிலும், கம்யூனிஸ்டுகள் பல விஷயங்களில் முரண்பட்ட நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்து வருகின்றனர். தமிழீழத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த இலங்கையை ஆதரிப்பது, கூடங்குளம் அணு திட்டங்களை ஆதரிப்பது, தேனி நியூட்ரினோ ஆய்வு மையத்தை ஆதரிப்பது மற்றும் உயர் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை ஆதரிப்பது உள்ளிட்ட பலவற்றைக் கூறலாம்.

அவர்கள் தங்களின் மார்க்சியத்தை மண்ணுக்கேற்றதாக மாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெறும் வகையிலேயே செயல்பாடுகள் அமைகின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் போன்ற தீவிர இடதுசாரி தமிழ்தேசியவாதிகள், மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்தியபோது, கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே அவர்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன என்று கூறப்படுவதுண்டு.

சிலர், மண்ணுக்கேற்ற மார்க்சியம் திராவிடம்தான் என்கிறார்கள். ஒப்பீட்டளவில் பார்க்கையில் அந்தக் கருத்து சற்று வலுவாகத்தான் இருக்கிறது..!

– மதுரை மாயாண்டி