சென்னை,
ஜக்கி வாசுதேவின் நதிகளை மீட்போம் என்ற யாத்திரையின் தொடக்கமாக கடந்த 1ந்தேதி நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பதாதைகளை காட்டி விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.
அப்போது, நதிகளுக்கு மொழி கிடையாது என்றும் அவை வாழ்வைப் பற்றி பேசுவதாகவும் கூறினார்.
நாட்டி அழித்து வரும் 40 சதவீத நதிகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரபல சாமியாரான ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கடந்த 3ந்தேதி கோவையில் பேரணியை தொடங்கினார்.
இதன் தொடக்க விழாவில், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழக அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவக், கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த பேரணி தமிழகத்தில் தொடங்கி, கேரளா, கர்நாடகா, மராட்டியம் என 16 மாநிலங்களின் வழியாக சென்று அக்டோபர் மாதம் டில்லியை சென்றடைகிறது.
30 நாள்களில் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பயணம் செய்யும் ஜகி வாசுதேவ் அக்டோபர் 2ம் தேதி டில்லியில் பேரணியை நிறைவு செய்கிறார்.
இறுதிநாள் நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஜக்கியின் இந்த பயணம், இதுவரை கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் 3,500 கிலோ மீட்டருக்கு மேல் கடந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது,
நதிகளை காப்போம் என்ற எனது விழிப்புணர்வு பயணம் இதுவரை 3,069 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளோம். இதுவரை பேரணி மேற்கொண்ட மூன்று மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வடக்கு நோக்கி நகரவுள்ளேன். எனவே, இந்தப் பேரணியை தமிழர்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இது 30 நாள்கள் பயணமல்ல, என் வாழ்நாள் ஆசை. கேரள முதல்வரிடம் சிறுவாணி அணை தொடர்பாக பேசினோம். அப்போது அவர், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக கூறினார்.
இதுபோல், தமிழகத்தில் அரசு அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 23 கோடி மரங்களை நடுவதாக தெரிவித்து உள்ளது. இதனால் தமிழகத்துக்குத்தான் அதிக நன்மை என்று கூறிய ஜக்கி, ஏனெனில் காவிரி தமிழகம் வந்தடையும். மேலும், காவிரியை பொறுத்தவரை தமிழ்நாடு கூட்டமைப்பு, கர்நாடக கூட்டமைப்பு ஆகிய வற்றைவிட விவசாயிகள் கூட்டமைப்புதான் தேவை என்பதை வலியுறுத்தினார்.
ஏனெனில் நதிகளுக்கு மொழி கிடையாது. நதிகள் நமது வாழ்க்கையைப் பேசுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.
நான் சிறுவனாக இருந்தபோது பழங்களைக் கடைகளில் வாங்கியது இல்லை. மரங்களில் ஏறி பழுத்திருப்பதை பறித்துச் சாப்பிடுவேன். ஆனால், இன்றைய தலைமுறைக்குப் பழங்களை மரத்தில் இருந்து பறித்து சாப்பிடுவது என்றால் என்ன என்பதே தெரியவில்லை. காரணம் அவர்களுக்கு மரம் ஏறத் தெரிவதில்லை.
தமிழக அரசு கிராமத்துக்கு ஒன்று அல்லது அரை ஏக்கர் நிலம் எங்களுக்கு வழங்கினால் அதைச் சிறுவர்களுக்காகப் பயன்படுத்துவோம். இங்கு கனி தரும் மரங்கள் நட்டு, அதை உருவாக்கி சிறுவர்களுக்கு கனிகளை இலவசமாக வழங்குவோம். அந்த தோட்டத்தில் 15 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் வந்து அங்குப் பழங்களை இலவசமாக மரத்தில் ஏறி பறித்து சாப்பிடலாம் என்றார்.
மேலும், அமைச்சர் பேசும்போது ராமனுக்கு அணில் போல் எங்களுக்குச் சேவை செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
நீங்கள் செய்ய வேண்டியது அணிலின் பணியை அல்ல; அனுமனின் பணியை. அணில் பணியைச் செய்ய எங்களிடம் லட்சக்கணக்கான சேவகர்கள் உள்ளனர்.
சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், 55 மில்லியன் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. எதிர்காலத்தில் இது இன்னும் மோசமாகும். தண்ணீர் ஆதாரங்கள் வேகமாக வற்றி வருகின்றன. எனவே, இந்தப் பிரச்னையைச் சரி செய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் கைகோக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஞாபகமாக அவர் பிறந்த பிப்ரவரியில் மரங்கள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த மாதம் மரங்கள் நடுவதற்கு ஏற்றது அல்ல என்பதால் ஜூலையில் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
10 ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. உலகின் மற்ற பகுதிகளில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சேற்றை உணவாக மாற்றும் வித்தையை நம்பவர்கள் செய்துள்ளனர். அத்தகைய விவசாயிகள் தற்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற னர்.
உலகின் அனைத்து உயிரினங்களும் இயற்கையின் நண்பர்களாகவே உள்ளன, மனிதர்களைத் தவிர. எனவே நாமும் மற்ற உயிரங்களைப் போல் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் நாங்கள் விழிப்புணர்வோடு உள்ளோம் என்பதைத் தமிழ் மக்கள் தேசத்துக்கு உணர்த்த வேண்டும். எனவே, தொடர்ந்து பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் நதிகளை மீட்போம் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, அப்போலோ குடும்பத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, சி.ஐ.ஐ. தலைவர் ரவிச்சந்திரன், நடிகை சுஹாசினி மணிரத்னம், நடிகர் விவேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.