சென்னை:
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை என செய்யை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகள் அமைக்கப் பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்ட வருகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, டிஜிட்டல்மயமாக்கம் மூலம், வாகனங்களுக்கு பாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் முறையிலான  கட்டண வசூல்முறையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமல்படுத்தி உள்ளது. இந்த டிஜிட்டல் முறையிலான கட்டண வசூல் ஜனவரி 15ந்தேதி முதல் கட்டாயமாக்கப் பட்டு உள்ளது.
இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டண முறை தொடர்பான, அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நிதிபதிகள் ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.  மனுமீதான கடந்த விசாரணையின்போது, மத்திய நெடுஞ்சாலைத்துறை பதில் அளித்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, மத்தியஅரசும் பதில் தெரிவித்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து, ஃபாஸ்டேக் முறைக்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், இதில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன், மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.