கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாகவும், நீட் தேர்வில் சமநிலைத் தன்மையும், சமூக நீதியும் இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ் அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மாணவர்கள் மீது மத்திய பாஜக அரசு 2016-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து திணித்து வருகிறது. இதனால் தமிழக மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புறத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வு வழக்கு குறித்து நீதியரசர்கள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் தமிழக மக்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மத்திய – மாநில அரசுகளால் நீதி மறுக்கப்பட்ட நிலையில் ஏதோ ஒரு வகையில் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சமர்ப்பித்த ஆவணத்தின்படி, நீட் தேர்வு எழுதிய 3,081 மாணவர்கள் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 48 மாணவர்கள்தான் பயிற்சி மையத்தில் (Coaching Centres) சேராமல் தேர்வு பெற்றிருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ஏறத்தாழ 1.6 சதவீதத்தினர் மட்டுமே தேர்வு பெற்றிருப்பது நீட் தேர்வு யாருக்காக என்பது அம்பலமாகியுள்ளது. மேலும், இதில் 66 சதவீத மாணவர்கள் பலமுறை நீட் தேர்வு எழுதிய பிறகு தேர்வு பெற்றிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் 2,041 மாணவர்கள் இரண்டு, மூன்று முறை தேர்வு எழுதி பிறகு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால், 1040 மாணவர்கள் தான் முதல் முறையாக தேர்வு எழுதியதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 1,650 மாணவர்களில் 52 மாணவர்கள்தான் பயிற்சி வகுப்புகளில் சேராமல் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதில் மீதி 1,598 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பிறகு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதிலும் 1,062 மாணவர்கள் பலமுறை நீட் தேர்வு எழுதி பிறகு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 588 மாணவர்கள் முதல் முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. நீட் தேர்வுகளில் நிலவுகிற அநீதிகளுக்கு இந்தப் புள்ளி விவரங்களை விட வேறு சான்று தேவையில்லை.

பொதுவாக, தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றாலும், மத்திய – மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது நீட் தேர்வின் மூலமாக வசதிமிக்கவர்களுக்காக மட்டும் நடைபெறுகிறது என்பது நீதியரசர்கள் மூலமாக வெளிவந்துள்ள அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் உறுதி செய்கிறது. பயிற்சி வகுப்புகளில் சேருவற்கு 5 லட்ச ரூபாய் பணம் செலுத்தி பயிற்சி பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிற அவலநிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. இத்தகைய வசதி இல்லாத, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை இருக்கிறது. பொதுவாக, நீட் தேர்வில் சமநிலைத் தன்மை இல்லை, சமூக நீதியும் இல்லை.

அதேபோல, முதல் முறையாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும், நீட் தேர்வும் ஒரே நேரத்தில் எழுத வேண்டிய கடுமையான நிலை இருக்கிறது. ஆனால், பலமுறை நீட் தேர்வு எழுதியவர்களுக்கு இத்தகைய சிரமம் இல்லை. சமநிலையில் இல்லாதவர்கள் நீட் தேர்வின் மூலம் சமமாக கருதப்படுகிறார்கள். இது இயற்கையின் நீதிக்கு எதிரானதாகும். இதுகுறித்து, மத்திய பாஜக அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. இதைத் தடுத்து நிறுத்தாத அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீடுகளை சில தனியார் மருத்துவ கல்லூரிகள் விற்பனை செய்ததும் நீதியரசர்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு அம்பலத்திற்கு வந்துள்ளன.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்களின் கூற்றின்படி, மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கதவுகள் பணக்காரர்களுக்கு திறந்து விடப்பட்டு, ஏழைகளுக்கு மூடப்பட்டிருக்கின்றன. இதுதான் சமூக நீதியின் களமாக விளங்கிய தமிழகத்தின் தற்போதைய அவலநிலை. இத்தகைய சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து மத்திய புலனாய்வுத்துறை மூலமாக விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நீதியரசர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

இதற்குப் பிறகும் மத்திய – மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.