திருச்சி:

மாற்று வழி செய்யாமல், இயந்திரம் மூலம் மீட்புப்பணி தொடர்ந்தால், அது  மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கும் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி கூறி உள்ளார்.

அறந்தாங்கி அருகே ஆர்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. நாடு முழுவதும் குழந்தையை உயிருடன் மீட்க அனைத்து மதத்தினரும்  பிரார்த்தனையில் ஈடுபட்டு வரும் நிலையில், வெயில், மழையையும் பொருட்படுத்தாமல், குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக சம்பவ இடத்தில் முகாமிட்டு பணிகளை முடுக்கி வருகின்றனர்.

இருந்தால், அந்த பகுதியில் உள்ள கடின பாறைகளால், துளைபோடும் ரிக் இயந்திரங்கள் கடும் சவாலை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், குழந்தை சிக்கியுள்ள பகுதிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்,, தமிழகஅமைச்சர்கள், விசிக தலைவர் திருமாவளவன் உள்பட பலர் சென்று, மீட்பு பணிகளை பார்வையிட்டும், சுர்ஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சுர்ஜித் சிக்கியுள்ள பகுதியான அறந்தாங்கி நடுக்காட்டுக்கோட்டை பகுதிக்குச் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். அங்கிருந்த அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்த நிலையில், சுர்ஜித்தின் வீட்டுக்குச் சென்று, பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, பிளான் பி இல்லாமல் மீட்பு பணி நடை பெற்று வருவதாகவும் இயந்திரத்தால் முடியாத பட்சத்தில் மீட்புக்குழுவினரிடம் மாற்ற வழி இல்லை என்றும் தெரிவித்தார்.

இனிமேலும் இயந்திரம் மூலம் மீட்பு பணியை தொடர்வது மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கும் என்றவர், இந்த விஷயத்தில்  முதல்வர் உடனடியாக  தலையிட்டு, அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சுர்ஜித் விவகாரத்தில்  அடுத்து என்ன செய்வது என்று மீட்புக்குழுவினர் அரசுடன் ஆலோசனை செய்து வருகின்றனர்,   திட்டமிட்டபடி இரண்டு இயந்திரங்கள் மூலம் பலம் கொண்ட பாறைகளை உடைக்க முடிய வில்லை… பாறைகள் மிகவும் கடினமாக உள்ளது.. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து வருகிறோம் என்று கூறினார்.