காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). தொழிலதிபரான இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார்.
கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். இந்த சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் நேற்று (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார்.
காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நாங்குநேரி, திசையன்விளை பஜார், கரைசுத்துபுதூர், உவரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்திய திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் இது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஜெயக்குமார் தனசிங்கின் உடற்கூராய்வு நிறைவு பெற்று இன்று (05.05.2024) காலை 08.30 மணியளவில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது ஜெயக்குமார் தனசிங்கின் உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் சொந்த ஊரான கரைச்சுத்து புதூரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஜெயக்குமார் தனசிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மறைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. இவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயக்குமார் தனசிங் இறந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடக்கிறது. குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்ட வேண்டும். அரசியல் பின்புலத்தோடு இருந்தாலும் நடவடிக்கை உறுதி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் ஒரு குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் இறுதி அறிக்கை தேசிய தலைமையிடம் சமர்ப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.