தேனி:

வைகோ நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று என தேனி மாவட்ட பா.ஜனதா கட்சியினர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் போராட்ட களமாக மாறும் நிலை உள்ளதால் வைகோ நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள  மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

நியூட்ரினோ  ஆராய்ச்சி செய்வதற்கான பணியை தொடங்க  கடந்த 2011ம் ஆண்டு  சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு காரணமாக  பசுமை தீர்ப்பாயம்  அனுமதி மறுத்தது. அதைத்தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டத்துக்கு  6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை தமிழகத்தில் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைக்க  மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் கடந்த 31ந்தேதி தொடங்கினார்.

10 நாட்கள் நடைபெற உள்ள இந்த நடைபயணம் இன்று 6வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வைகோ நடை பயணத்தை அனுமதிக்கக்கூடாது என்றும், அதை  தடுத்து நிறுத்த கோரியும்  தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜபாண்டியன் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், நியூட்ரினோ ஆய்வு கூடம் அமைக்க போடி அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம், சுற்றுப்புற சூழல் பாதிக்காது என ஆராய்ச்சி குழுவினர் மக்களுக்கு விளக்கி உள்ளனர்.

ஆனால் வைகோ ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களுக்கு நேர் எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார். இதனால் தேனி மாவட்டம் போராட்ட களமாக மாறும் நிலை உள்ளது. எனவே வைகோ நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.