தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோவில்.
உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் தென்திருப்பேரை ஆகும். இங்கு அவர் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கமே கைலாசநாதர் ஆகும்.
குதிரை வாகனத்தில் கிரகங்கள்:
நவகிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம் குதிரை என்பது நமக்குத் தெரியும். இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் காட்சிதரும் சூரியன், சந்திரன், குரு பகவான், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களுமே குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரிலும், குரு பகவானும், சுக்கிர பகவானும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சந்தியா பகவான் பத்து குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். இது வேறெங்கும் காணமுடியாத சிறப்பம்சம் ஆகும்.
முக்கொம்பு தேங்காய்:
அம்பாள் சன்னிதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. முற்காலத்தில் ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை என்பவர் ஒரு சமயம், இந்தத் தென்திருப்பேரை பகுதிக்கு வந்தார். தனக்கு குடிக்க இளநீர் கொண்டு வரச் சொல்லித் தன் காவலாளிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். கலெக்டரின் உத்தரவை ஏற்றச் சேவகர், அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் பறிக்க முற்பட்டார்.
அங்கிருந்த விவசாயியோ அந்தத் தோப்பில் விளையும் இளநீர் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக்கூடியது என்று சொல்லி இளநீரை பறிக்க விடாமல் தடுத்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு, ‘‘இந்தத் தோப்பிலுள்ள இளநீருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? இப்போ பறிச்சு போடப்போறியா இல்லையா என்று அதட்டினார். கலெக்டரின் உத்தரவைத் தட்ட முடியாத விவசாயி, ஒரு இளநீரை பறித்துப் போட்டார்.
என்ன ஆச்சர்யம் அந்த இளநீரில் மூன்று கொம்புகள் முளைத்திருந்தன. அதனை கண்ட மன்னன் பயந்து விட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டும் அல்லாமல், தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த முக்கொம்பு தேங்காய், ஒரு கொம்பு ஒடிந்து, தற்போது இரண்டு கொம்புகளுடன் மட்டுமே காட்சித்தருகிறது.
தென்திருப்பேரை பெயர்க் காரணம்:
சோழ தேசத்தில் திருச்சி அருகில் திருப்பேரை என்ற தலம் உள்ளது. அதே போல் தெற்கே பாண்டியநாட்டில் இருந்த இந்தத் தலமான திருப்பேரை “தென்திருப்பேரை” என்று அழைக்கப்பட்டது. இங்கு நவதிருப்பதி ஸ்தலங்களில் மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் உறையும் தாயார் திருப்பேரை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெயரால் தென்திருப்பேரை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
சுவாமி கைலாசநாதர்:
கிழக்கு நோக்கிய தனி கருவறையில் சுவாமி கைலாசநாதர் தாமரை வடிவ பீடத்தின் மீது, லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். சரவிளக்கு சுடர்விடும் கருவறைக்குள் பெருமானை கண்குளிர கண்டு வணங்கினால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழலாம்.
அழகியபொன்னம்மை:
கிழக்கு நோக்கிய தனி கருவறையில் அழகியபொன்னம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் காட்சித்தருகிறாள். இந்த அம்மையை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
திருக்கோவில் அமைப்பு:
தாமிரபரணி ஆற்றின் தெற்கு கரையோரம் அமையப்பெற்றுள்ள இந்தக் கோவிலுக்குள் நுழையத் தெற்கு வாயிலே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளே நுழைந்ததும் முதலில் கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் அழகியபொன்னம்மை நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறாள். அதற்கு அடுத்து கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் கைலாசநாதர் காட்சித் தருகிறார். இங்குச் சுவாமிக்கும், அம்பாளுக்கும் தனித்தனி விமானத்துடன் கூடிய தனி சந்நிதி உள்ளது. சுற்று பிரகாரத்தில் நந்தி, விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமி அம்மை, பைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாகக் காட்சிதருகிறார்கள்.
திருக்கோவில் சிறப்புக்கள்:
கோவிலில் உள்ள சுவர்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் அனைத்தும் முதலாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் உள்ளவையெனக் கூறப்படுகிறது.இந்தக் கல்வெட்டுகளில் திருப்பேரை கிராமம் ‘சுந்தரபாண்டிய சதுர் வேதி மங்கலம்’ எனக் குறிப்படப்பட்டுள்ளது.
மழைக் கடவுளான வருண பகவான் இங்கு இறைவனை வழிபட்டதால் இந்தத் தலம் வருண ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்குள்ள பைரவருக்கு ஆறு கரங்களுடன் காட்சிதருவது சிறப்பம்சம் ஆகும். சிறப்பு வாய்ந்த இந்தப் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் பூஜை செய்தால் தொழில் விருத்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முக்கிய விழாக்கள்:
இங்குக் கார்த்திகை மாதம் சோமவாரம், புரட்டாசி நவராத்திரி, மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய வருடாந்திர விழாக்களும், பிரதோஷம், அஷ்டமி வழிபாடு போன்ற மாதாந்திர வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகிறது.
அமைவிடம்:
திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 35 கி. மீ தொலைவில் திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது தென்திருப்பேரை. இங்குச் செல்லத் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் அடிக்கடி உள்ளன