சென்னை: மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் முக்கிய புள்ளிகளின் ஊழல் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக திமுக அரசு மீது  அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

அமலாக்கத்துறையினர் இன்று  சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அமலாக்கதுறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொளத்தூர் சிவ பார்வதி நகரில் அமைந்துள்ள முத்து என்பவர் வீட்டில், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் அமைந்துள்ள கணேஷ் என்பவர் வீட்டில், பெசன்ட் நகரில் தொழிலதிபர் ரவி ராம் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் முக்கிய புள்ளிகளின் ஊழல் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அடையாளம் தெரியாத சிலர், சோதனை என்கிற பெயரில் திருடிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  திமுக அரசு மீது  அமலாக்கத்துறை குற்றம் சாட்டி தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.

கடந்த மாதம்,  அமலாக்கத்துறையின் மதுரை மண்டல அதிகாரி அங்கித் திவாரி என்பவர், திண்டுக்கல் அரசு மருத்துவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருப்பதற்கு, 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர்  அத்துதீமறி சோதனை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அனுமதியின்றி முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து சென்றதாக காவல் ஆணையரிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர்.

ஆனால்,  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது  தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து, புகார் தொடர்பாக உரிய ஆதாரங்களை அளிக்குமாறு, காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் அடுத்தடுத்து 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால்,  அமலாக்கத்துறை அதிகாரிகள் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில்,   அமலாக்கத் துறையினர் சார்பில்  எழுத்துப்பூர்வமாக பதில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில்,  தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முக்கிய புள்ளிகளின் ஊழல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை கடந்த டிசம்பர் ஒன்று, இரண்டு தேதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அடையாளம் தெரியாத சிலர், சோதனை என்கிற பெயரில் திருடிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் முக்கிய புள்ளிகளின் ஊழல் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. மேலும் முக்கியமான வழக்குகளின் விசாரணையைத் தடுப்பதில் தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளடன், தங்களுக்கு  அனுப்பப்பட்டுள்ள சம்மனில் போதிய விவரங்கள் இடம்பெறவில்லை என்றும், குறிப்பாக யார் அனுப்பிய சம்மன் என்ற தகவல் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதே சமயம், விசாரணையின் தொடக்கத்திலேயே அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியதற்கான காரணம் புரியவில்லை என்றும்  லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும், தாங்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்குமாறு அமலாகத்துறையினர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் அமலாக்கத்துறை தரப்பில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ED தனது புகாரில், நான்கு DVAC அதிகாரிகள் மற்றும் இரண்டு சாட்சிகள் மட்டுமே சோதனை நடத்த அனுமதிக்கப்பட்டனர், ஆனால் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் உட்பட 35 பேர் “ஊடகங்கள் மற்றும் கும்பல் தங்கள் மதுரை அலுவலகத்தில் வலுக்கட்டாயமாக நுழைந்தனர்”. டிவிஏசி மதுரை கிளையின் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) எம்.சத்தியசீலனைத் தவிர, தங்களின் அடையாள அட்டைகளை வழங்க அவர்கள் தயக்கம் காட்டினர் என குற்றம் சாட்டி உள்ளது.

இதன் மூலம் அமலாக்கத்துறை மற்றும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ளது.