சென்னை: மஞ்சப்பை என்பது அவமானமல்ல; சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம் என மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம் சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் கூறியதாவது: “மஞ்சள் பை கொண்டு வந்தால் வீட்டில் ஏதேனும் விசேஷமா?, பத்திரிகை கொண்டு வந்துள்ளீர்களா? என்று கேட்ட காலம் உண்டு. அதற்கு பிறகு, பிளாஸ்டிக் பை வந்து அதுதான் நாகரீகம், மஞ்சப்பை வைத்திருப்பது கேவலம் என்ற ஒரு சூழல் ஏற்பட்டது. மஞ்சள் பை வைத்திருந்தாலே அவரை பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக்கூடியவர்கள் உருவானார்கள்.

சினிமாவிலும், தொலைக்காட்சி தொடரிலும் கூட மஞ்சள் பையை ஒருவர் கக்கத்தில் வைத்து வந்தால் அவரை கிராமத்துக்காரர் என்று அடையாளம் காட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில், தங்களது வியாபாரத்திற்காக பல்வேறு நிறங்களில் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து விற்பனை செய்யும் முயற்சியில் சில நிறுவனங்கள் ஈடுபட்டன.இதனால் மஞ்சள் பை பயன்பாடு குறைந்தது.

சுற்றுச்சூழல் பிரச்சினைதான் மானுடத்தின் மாபெரும் பிரச்சனை. மஞ்சள் பை தான் சுற்றுச்சூழலுக்கு சரியானது. ஆனால்,அழகான பிளாஸ்டிக் ஆபத்தானது என்று பரப்புரை செய்த பிறகு,தற்போது துணிப்பை பயன்பாடு மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன்படி,ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, தயாரிப்பு போன்றவற்றிற்கு தடை வழங்கப்பட்டது.மேலும், இதனை மீறி தயாரித்த 130 தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும்.மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்.

“அகத்தூய்மை வாய்மைக்கு, புறத்தூய்மை வாழ்வுக்கு” என்ற வைர வரிகளை உருவாக்கி கொடுத்தவர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். அந்த வழியை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.அனைத்து துறைகளிலும் முன்னிலையில் உள்ள தமிழகம்,சுற்றுச்சூழலை பராமரிப்பதிலும் முன்னிலை மாநிலமாக திகழ வேண்டும். மஞ்சப்பை என்பது அவமானமல்ல. சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம்.

இவ்வாறு அவர் கூறினார்.