சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய மத்தியஅரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்ததும்,  ராஜீவ் கொலை வழக்கின் கைதிகளின் ஒருவரான பேரறிவாளன் உடல்நிலையை காரணமாக  பரோல் கொடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 6 மாதமாக பேரறிவாளன் பரோலில் இருந்து வருகிறார்.

இதையடுத்து, மேலும் பல கைதிகள் தரப்பில் பரோல் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே மற்றொரு கைதியான ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பரோல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க  முடிவு செய்துள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் நளினி தாயார் பத்மா, வயது மூப்பின் காரணமாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கடைசி காலத்திலாவது மகளுடன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு அளித்த நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தையும் நாடியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, நளினிக்கும் ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நளினி விரைவில் அவர் பரோலில் வருவார் என்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக சுமார் 30ஆண்டுகால சிறை வாழ்க்கையில் இருந்து நளினி சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள பரோல் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.