சென்னை:
ந்திய பொருளாதார சரிவு என்பது கொரோனா லாக்டவுனால் ஏற்பட்டது அல்ல; பணமதிப்பிழப்பில் தொடங்கியது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இந்திய பொருளாதார சரிவு தொடர்பான கட்டுரையில் ப. சிதம்பரம் எழுதியுள்ளதாவது:

மத்திய புள்ளிவிவர அலுவலகம் நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுக்குரிய ஜிடிபியை வெளியிட்டிருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஜிடிபி 23.9% சரிவை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 30-ல் இருந்த ஜிடிபி வளர்ச்சியில் கால் பங்கு விகிதம் கடந்த 12 மாதங்களில் வீழ்ச்சியடைந்துவிட்டது. அதாவது பொருளாதார தேக்கநிலைக்கும் கொரோனா காலத்துக்கும் இடையே 12 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கின்றனர்.

உலக நாடுகளில் கடந்த ஏப்ரல்- ஜூன் காலாண்டில் மிக மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்ட நாடு இந்தியாதான் என்கிறது ஐ.எம்.எப். இந்தியாவில் வேளாண்துறை, வனத்துறை, மீன்பிடித்துறை ஆகியவை 3.4% வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் நாட்டின் நிதி அமைச்சரோ, கடவுளின் செயல் என்று கடவுள் மீது பழிபோட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒவ்வொரு துறையிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. உற்பத்தித் துறை 39.3% சரிவை எதிர்கொண்டிருக்கிறது. கட்டுமானத்துறையனாது 50.3% சரிவை சந்தித்துள்ளது. வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை 47.0% சரிவை எதிர்கொண்டுள்ளன.

இந்தியப் பொருளாதாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் யாருக்கும் இந்த சரிவு ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்காது. இத்தகைய சரிவு முன்கூட்டியே கணிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட ஒன்றுதான். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையும் கூட இதனைத்தான் சுட்டிக்காட்டியது. பிற நாடுகளின் பொருளாதார சரிவுக்கும் இந்திய பொருளாதார சரிவுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

இந்திய பொருளாதாரத்தின் சரிவு என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து தொடங்குகிறது. 2018-19, 2019-2020-ல் 8 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது சரிவில்தான் இருந்து வருகிறது. அதாவது ஜிடிபியானது 8.2%-ல் இருந்து 3.1% ஆக சரிந்துதான் இருக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கமோ, உலகத்திலேயே அதிகவேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டநாடு இந்தியா என கூறி வந்தது. விரிந்து கிடக்கும் பாலைவனத்தில் தண்ணீருக்கான வாய்ப்பே இல்லாத நிலையில் நிதி அமைச்சரும் தலைமை பொருளாதார ஆலோசகரும் பசுந்தளிர்களைப் பார்த்தார்களாம் என்கிற கதையாக இருக்கிறது!