சென்னை:  பாலியல் வன்கொடுமையால்  பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவி, தனது புகார் குறித்து,  அண்ணா பல்கலைக் கழக பாதுகாப்பு குழுவிடம்தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும் என தமிழக அமைச்சர் கோவி செழியன் கூறி உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பாலியல் வன்முறைகள், கஞ்சா உள்பட போதை பொருள் நடமாட்டம் அதிகரிப்பு, சாதிய கொலைகள், சாதிய சண்டைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வதில் ஆர்வம் காட்டாத  திமுக அரசும், காவல்துறையும், அரசையும், காவல்துறையினரையும் விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரை கைது செய்வதில்தான் ஆர்வம் காட்டி வருகிறது.  பல பகுதிகளிலேயே ஆளும் கட்சியினரே அராஜகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மெத்தனம் காட்டுவது  கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், தனது காதலனுடன்  தனிமையில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை,  திமுக பிரமுகரான ஞானசேகரன் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ள  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அருகே உள்ள கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்தவிவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் அரசையும், காவல்துறையினரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்,  பாதிக்கப்பட்ட மாணவி நடந்த விஷயங்களை முன்பே பல்கலைக் கழக பாதுகாப்பு குழுவிடம் தெரிவித்திருக்க வேண்டும் என வியாக்கியம் செய்துள்ளார்.

மாணவி தான் பாதிக்கப்பட்டது குறித்து முன்பே பல்கலைக் கழக பாதுகாப்பு குழுவிடம்  தெரிவித்திருந்தால் இன்னும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று கூறியதுடன்,  மாணவிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினை, அச்ச உணர்வு காரணமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும்,   அந்த மாணவி இரண்டு  தினங்கள் கழித்து புகார் அளித்திருந்தாலும் உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,  இந்த விவகாரத்தில் அரசு, பல்கலைக் கழகம், காவல்துறை விரைந்து செயல்பட்டுள்ளது என கூறி உள்ளார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர் திமுகவை சேர்ந்தவர் என்பதும் முன்னாள் குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ள நிலையில், அவர்மீது  மாணவி குற்றம் சாட்டியிருந்தால், அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு எவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கும்  என அமைச்சர் எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை.