நாசிக்:
வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெங்காயம்  அதிக அளவில் விளைகிறது.
வெங்காயம் இரு பருவமாக விளைவிக்கப்படுகிறது.  ஜனவரி முதல் மே மாதம் வரை ஒரு பருவமாகவும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மற்றொரு பருவமாகவும் வெங்காயம் அறுவடைசெய்யப்படுகிறது.
venkaym
முதல் பருவ வெங்காயம் தற்போது விற்பனையில் உள்ள நிலையில் 2-வது பருவ வெங்காயம் அறுவடைக்கு தயாராக உள்ளது. முதல் பருவ வெங்காயம் டன் கணக்கில் விற்காமல் தேங்கி உள்ள நிலையில் 2-வது பருவ வெங்காயம் விற்பனைக்கு வர உள்ளதால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
வெங்காய விளைச்சலுக்கு பேர் போன மகராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை வெறும் 5 பைசா என்ற அளவுக்கு கடும் வீழ்ச்சி கண்டுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  அதேபோல் ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாசிக் மாவட்டம் கரஞ்சாவோன் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் டராடே என்ற விவசாயி தனது மொத்த விளைச்சலான 13 குவிண்டால் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ஐந்து பைசா என்று வேளாண்மை விற்பனை வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்து மொத்த வெங்காயத்தையும் தன் நிலத்தில் கொட்டி  தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.
ரூபாய் 7000 செலவிட்டு 10 ஏக்கரில் விவசாயம் செய்து , போக்குவரத்துக்கு ரூ.780 செலவிட்டு விளைந்த மொத்த 13 குவிண்டால் வெங்காயத்தையும் வேளாண்மை விற்பனை வாரியத்துக்கு கொண்டு வந்தால் அவர்கள் மொத்தத்துக்கும் விலை வெறும் ரூ.65 என்று நிர்ணயிக்கிறார்கள். நான் மொத்த விளைச்சலையும் கீழே கொட்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.
ஆனால் டராடேயின் குற்றச்சாட்டை மறுத்த வேளாண்மை விற்பனை வாரியம்.  அவர் கொண்டு வந்த வெங்காயம் ஈரமாகவும், அழுகிய நிலையிலும் இருந்ததாலேயே அவ்வளவு குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டியதிருந்தது என்று பதில் அளித்திருக்கிறது.
இதற்கிடையே நாசிக்கில் உள்ள விவசாயிகள் சங்கங்கள் வேளாண்மை விற்பனை வாரியம் மிக சொற்ப விலையை நிர்ணயிப்பதைக் கண்டித்து வெங்காயத்தை நிலத்தில் கொட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திரா, மகாராஷ்டிராவில் குடோன்களில் அதிக அளவு ‘ஸ்டாக்’ இருக்கும் நிலையில் விளைச்சல் அதிகமாகி வெங்காயம் குவிவதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம் ) கிலோ ரூ.20 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதை சாகுபடி செய்த விசவாயிகள் முதலீடு செய்த பணம் நஷ்டத்தில் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் வெங்காயம் விளைவித்த விவசாயிகள் கண்ணீ ர் வடிக்கிறார்கள்.