காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஆர்.ஜெ.டி., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 26 கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 18 ல் பெங்களூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்த கூட்டணிக்கு INDIA என்று பெயரிடப்பட்டது. இதனையடுத்து கூட்டணி வழிகாட்டு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்து விவாதிக்க அடுத்ததாக மும்பையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


.
கூட்டத்தின் முதல் நாளன்று எதிர்க்கட்சி தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து கொள்வார்கள் என்றும் அடுத்த நாள், அதாவது, செப்டம்பர் 1 ஆம் தேதி அதிகாரபூர்வ கூட்டம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை பவாயில் உள்ள ஹோட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

2024 தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படும் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் INDIA கூட்டணி மூன்றாவது கூட்டம் இம்மாத இறுதியில் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.