டில்லி,

‘பச்சமுத்து குற்றவாளி’ என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின்  கருத்தை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிக்க  சீட்டு வாங்கித் தருவதாக ரூ.74 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து கைது கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக வேந்தர் மூவிஸ் பட அதிபர் மதன்  கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாய மானார்.  அதைத்தொடர்ந்து அவர் மூலம் எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் மருத்துழவம் படிக்க  பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் 111 பேர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அதில், தங்களிடம் ரூ.74 கோடி மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவ தாக எழுந்த மோசடி புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர். விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் மருத்துவக் கல்லூரி சீட்டு மோசடி தொடர்பாக மதனின் நண்பர் விஜயபாண்டியனை கைது செய்தார். தொடர்ந்து பச்சமுத்து வின் ஐஜேகே (இந்திய ஜனநாயக கட்சி) நிர்வாகிகள் பார்கவன் பச்சமுத்து, சீனிவாசன், சண்முகம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பச்சமுத்து மீது ஏமாற்றுதல் (ஐபிசி 420), நம்பிக்கை மோசடி (406), உள்நோக்கம் (சதி) (34) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இதுகுறித்த வழக்கின் விசாரணையின்போது, பச்சமுத்து குற்றவாளி என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் கருத்து தெரிவித்திருந்தார். பின்னர் மாணவர்களுக்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில்,  தம்மை ‘குற்றவாளி’ என்று நீதிபதி கூறிய பிரகாஷ் கூறிய கருத்தை நீக்கக்கோரி உச்சநீதி மன்றத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதி மன்றம், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கூறிய கருத்தை நீக்க மறுத்து, அந்த கருத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.