டில்லி :

மிழன் எப்போதும் தன்மானத்துடன் போராட வேண்டும். தற்கொலை செய்வேன் என்று சொல்வது கோழைத்தனம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் கடந்த 26ம் தேதியில் இருந்து டில்லியில் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “இதுவரை காவிரி விவகாரத்தில் எந்தவித நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மேலாண்மை வாரியத்தை முடக்கும் முயற்சியில் தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

ஆனால் தமிழக பாஜக தலைவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று சொல்லி மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்

காவிரி வாரியத்திற்காக ராஜினாமா செய்யத் தயார் ஆனால், அதனால் எதுவும் நடக்காது என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசி இருக்கிறார். முதலில் அவர் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரட்டும். அதைவிடுத்து மத்திய அரசைக் காப்பாற்றுவதற்காக தமிழக மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்” என்று பாண்டியன் தெரிவித்தார்.

அவரிடம், “அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், தற்கொலை செய்துகொள்வேன் என்று பேசியது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பாண்டியன், “மானமுள்ள தமிழன் அப்படி செய்யமாட்டான். தன்மானத்தோடு போராடுவதே தமிழனின் குணம். அதைவிடுத்து தற்கொலை செய்வேன் என்று செய்வது எல்லாம் கோழைத்தனம். முடிந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுகவினர் ஆதரிக்கட்டும்” என்றார்.

மேலும்,”அடுத்தகட்ட போராட்டங்களை தமிழக அரசே முன்நின்று நடத்த வேண்டும். உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். விவசாயிகள் அடுத்து பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட இருக்கிறோம்” என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.