டில்லி,

டந்த 15 நாட்களாக டில்லிஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர்  விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து திமுக எம்.பி. சிவா, போராடும் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு  மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்தார்.

அப்போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில்,

நிதி அமைச்சர் ஜெட்லியை சந்தித்ததில் மன நிறைவு அடைந்துள்ளோம். அவர்  எங்களை அமர வைத்து, கோரிக்கைகளை  கேட்டறிந்தார்.  எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார். இருந்தாலும், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.

அதையடுத்து,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்..

அதைத்தொடர்ந்து  தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுடன் மத்திய விவசாயத்துறை அமைச்சர்  ராதாமோகன் சிங்கையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.