நெல்லை:

‘விவசாயத்தால் லாபம்’ என்ற பேட்டி காரணமாகவே நெல்லை விவசாயி வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. கொள்ளையர்களை விரட்டியடித்த வயதான  நெல்லை விவசாய தம்பதிக்கு தமிழக அரசின்  வீரதீர செயல் விருது வழங்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வயதான விவசாய தம்பதிக்கு,  வீரதீர செயலுக்கான  விருது வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

கொள்ளை முயற்சிக்கு காரணமான ‘மாத இதழ்’ பேட்டி

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வயதான தம்பதிகள் கொள்ளையர்களை விரட்டியடித்த வீடியோ வைரலானாது. இந்த வீடியோவில் உள்ளவர்கள், நெல்லை அருகே உள்ள கடையம் பகுதியைச் சேர்ந்த விவசாய தம்பதிகள்.

அவர்கள்  சமீபத்தில் பசுமை விகடன் மாதமிரு இதழுக்கு தங்களுக்கு விவசாயத்தால் நல்ல லாபம் கிடைத்துள்ளது என்றும்,  இரண்டரை ஏக்கர் நிலத்தில் எலும்மிச்சம் பயிரிடப்பட்டு உள்ளதாகவும் இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவர்கள் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்களது வீடு கல்யாணிபுரம் மெயின் ரோட்டில் தோட்டத்தில் அமைந்துள்ளது. இவர்களது குழந்தைகள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால், இவர்கள் இருவர் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர்.

இதையறிந்த கொள்ளையவர்கள், அந்த வயதான தம்பதிகள் குறித்து நோட்டமிட்டு கடந்த 11ம் தேதி இரவு 10 மணியளவில் கொள்ளையடிக்க வந்துள்ளனர்.  வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்  சண்முகவேல், செந்தாமரை தம்பதியினரிடம்  அரிவாளைக் காட்டி மிரட்ட முற்படுகையில்,  அவர்கள், கொள்ளையர்கள் மீது  சரமாரியாக தாக்குதல் நடத்தத் தொடங் கினர்.அருகில் இருந்த பொருட்களை வீசி எறிந்தும், நாற்காலையை கொண்டும் கொள்ளையரை தாக்கியதால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வயதான தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து அறிந்த நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் வந்த அந்த தம்பதிகளை பாராட்டிச்விட்டுச் சென்றார். இந்த நிலையில்,  கொள்ளையர்களை விரட்டியடித்த கடையத்தை சேர்ந்த மூத்த தம்பதிக்கு விருது வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில், கொள்ளையர்களை விரட்டியடித்த கடையத்தைச் சேர்ந்த  விவசாய தம்பதிகளான சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு தமிழக அரசின் வீர தீர விருதை முதலமைச்சர் விருது வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அவரது வீட்டில் ஒருமுறை கொள்ளை முயற்சி நடைபெற்ற நிலையில், பாதுகாப்பு கருதி வீட்டை சுற்றி 14 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியாக வாழும் முதியவர்கள் வீட்டில் கேமரா பொருத்த வேண்டும் என்று கூறிய சண்முகவேல்,  உடல்நலம் குன்றிய முதியோர் வாழும் வீட்டில் பிள்ளைகள் காவலாளிகள் நியமிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கொள்ளையர்களை முதிய தம்பதி விரட்டியடித்த சிசிடிவி கேமரா பதிவு நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைக்கண்ட பலரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பதிவில், முதிய தம்பதியின் தீரமிகுந்த செயலுக்கு தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பதிவில், திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும். வீரம், பாசத்துக்கு முன்னாடி நான் பனி, பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்ட பார்வை. முதிர்ந்த தம்பதிகளுக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், விவசாயம் செய்வதால் லாபம் ஈட்டலாம் என்ற நல்லெண்ணத்தில் அவர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுக்க, அதுவே அவரது வீட்டில் கொள்ளையடிக்க காரணமாகி உள்ளது சமூக ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வயதிலும், தைரியமாக,  அரிவாளை காட்டி மிரட்டிய கொள்ளையர்களை தலைதெறிக்க ஓடவிட்ட வயதான விவசாய தம்பதிகளுக்கு  பத்திரிகை.காம் இணையதளம் தலைவணங்குவதில் பெருமை கொள்கிறது…

கொள்ளையர்களை விரட்டியடிக்கும் விவசாய தம்பதிகள் …. வீடியோ…