டில்லி,
நவம்பர் 5 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையமும் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் சம்பா பயிர்கள் நீர் மூழ்கி உள்ளன.
நகர்ப்புறங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் 5-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா அருகே வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும், தெற்கு கடலோர ஆந்திரா, தமிழகம், புதுவை, கேரளா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி, ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என சென்னை வானிலை மையமும் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.