டெல்லி:

பணமதிப்பிறக்க அறிவிப்பு விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் பிரதமர் மோடியை அழைக்க பாராளுமன்ற பொது கணக்கு குழுவுக்கு (பிஏசி) அதிகாரம் உள்ளது.


இது குறித்து பாராளுமன்ற பொது கணக்கு குழு தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே.வி. தாமஸ் கூறியதாவது:

பணமதிப்பிறக்க அறிவிப்பு விவகாரம் தொடர்பாக வரும் 20ம் தேதி ஆஜராகுமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், நிதித்துறை செயலாளர் அலோக் லாவசா, பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவர்களுக்கு சில கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். பதில் வர வில்லை. 20ம் தேதிக்கு முன்னர் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய யாரை வேண்டுமானாலும் அழைக்க குழுவுக்கு உரிமை உள்ளது. இது 20ம் தேதி அன்று என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருக்கும்.

குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக முடிவு செய்தால் பிரதமர் மோடியை கூட அழைக்கலாம். நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு பிரதமரை சந்தித்தேன். 50 நாட்களின் சகஜ நிலை திரும்பிவடும் என்றார். ஆனால் தற்போது வரை அந்த நிலை இல்லை.
பணமதிப்பிறக்க அறிவிப்பு முடிவை எடுத்த உயர் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. தனது சுய கவுரவத்தை பாதுகாப்பதற்காக நாட்டை பிரதமர் தவறாக வழிநடத்துகிறார். அவரது தவறான முடிவை நியாயப்படுத்துகிறார். புதிய 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ததில் இரக்கமில்லாத முறையில் செயல்பட்டுள்ளார்.

செல்போன் மூலம் முழுமையா பேசுவதற்கு கூட தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத நிலையில், மொபைல் மூலம் இ.பரிமாற்றம் செய்யும் அளவுக்கு அடிப்படை கட்டமைப்புகள் போதுமான வகையில் இருக்கிறதா?
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பின் எவ்வளவு பணம் வங்கிக்கு வந்துள்ளது?. மக்கள் தங்களது பணத்தை இயக்க கட்டுப்பாடு விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதா?. பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பிறகு பொருளாதாரத்திலும், ஏழைகளிடம் தாக்கம் ஏற்பட்டுள்ளதா? என்பது போன்ற கேள்விகள் பிஏசி சார்பில் கேட்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.