சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா, கி.வீரமணி உள்பட கூட்டணி கட்சி தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.

சென்னை அண்ணாசாலையில் தொடங்கிய சாலை மறியல் போராட்டம் பின்னர் பேரணியாக வாலாஜா சாலை வழியாக சென்னை மெரினா கடற்கரையை அடைந்தது.

இடையில் சேப்பாக்கம் அருகே அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுக்க முயன்றனர். ஆனால், தடுப்புகளை துக்கி எறிந்துவிட்டு பேரணி தொடர்ந்தது.

அதைத்தொடர்ந்து மெரினா சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,

காவிரி உரிமை போராட்டத்தை ஒடுக்க போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது என்று  குற்றம் சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தில்  மத்திய அரசு செவி சாய்க்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து செவிசாய்க்காத காரணத்தால் தான் போராட்டம் என்றும் கூறினார்.

காவிரி விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார் என்று தெரிவித்த ஸ்டாலின், ‘”ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தொடர்ந்த மனுவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்  என்றும் வலியுறுத்தினார்.

அப்போது அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் இருந்தனர்.