புதுக்கோட்டை,

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

போராட்டம் தொடங்கி 20 நாட்களாகியும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் சரியான முயற்சிகள் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள  நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆனால், இத்ததிட்டத்தின் காரணமாக வெளியேற்றப்படும் நீரால் விவசாய நிலம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி உள்ளது. மக்களின் அகிம்சை போராட்டத்துக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள்,  பெண்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

போராட் டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும், வெளியூர்களில் இருந்து இளைஞர்களும் நெடுவாசல் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.  போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.

நேற்றைய போராட்டத்தின்போது, பெண்கள் கும்மியடித்தும், ஒப்பாரி வைத்தும், பாடை கட்டியும் போராட்டம் நடத்தினர்.

நெடுவாசல் கிராம மக்கள் தங்கள் வீடுகளில்  அகல் விளக்கேற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டத்தை கைவிடக்கோரி, மத்திய மந்திரி, கலெக்டர், ஓ.என். ஜி.சி. அதிகாரிகள்  பேச்சு வார்த்தையில்  ஈடபட்டனர். ஆனால் இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று நெடுவாசல் மக்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மத்திய மாநில அரசுகளோ, நெடுவாசல் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

அரசுகளின் கண்டுகொள்ளாத நிலை நீடிக்குமானால், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகும் என்றும், இதுகுறித்து ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறி உள்ளனர்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 20 நாட்களாக நெடுவாசலை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக  நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அசாதாரண சூழல் நிலவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.